Translate

Friday, 16 March 2012

ஐ.நா. கண்காணிப்புக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்

இலங்கையின் விவகாரங்களுக்கு உள்நாட்டு ரீதியிலேயே தீர்வுகாணப்படும். அந்த வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கண்காணிப்புக் குழுவுக்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளித்தால் நாட்டில் மீண்டும் பயங்கரவாத பிரச்சினை உருவாகிவிடும். நாட்டின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில் எட்டப்படும் எவ்வகையான முடிவையும் ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழு செயற்பாடு என்பது உள்நாட்டு விடயமாகும். அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ள நாங்கள் அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதற்கு வெளி அழுத்தங்களோ வெளித்தலையீடுகளோ அவசியமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கூறியதாவது, இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து ஜெனீவாவில் தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்திவருகின்றோம். அதாவது எமது பிரசார வேலைத் திட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

முஸ்லிம் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்களைக் கொண்ட குழுவினர் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஏன் எதிர்க்கின்றோம் என்பதனை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்படுத்தியுள்ளோம்.

அத்துடன் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு எமது நிலைமையை தெளிவுபடுத்தி மகஜர்களை கையளித்து வருகின்றோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இவ்வாறு மகஜர்களை கையளித்து வருகின்றனர். ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா சுவீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போதைய இக்கட்டான நிலைமையில் இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவாவில் ஹொட்டல்களில் தங்கியிருந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.  இந்த விடயங்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

ஐ.நா.வுடன் பிரச்சினையில்லை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் பேரவையுடன் ஒத்துழைப்புடன் யெற்படவே விரும்புகின்றோம். ஆனால் நாட்டுக்கு எதிரான முயற்சிகள் இடம்பெறும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தவறான விடயங்கள் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தருஷ்மன் அறிக்கையை தாண்டி சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாங்கள் அடைந்த பாரிய வெற்றியாகும். நல்லிணக்க ஆணைக் குழுவானது எமது நாட்டின் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதாகும். அதன் பரிந்துரைகளை நாட்டின் அரசாங்கம் பாராளுமன்றம் அமைச்சரவை என்பன ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

இது எமது பிரச்சினை என்பதால் அதனை நாமே தீர்ப்போம். அதற்கு வெளி அழுத்தங்களோ வெளித் தலையீடுகளோ அவசியமில்லை. அமெரிக்காவின் பிரேரணையில் மூன்று விடயங்கள் உள்ளன. யுத்த காலத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா? என்று ஆராயப்பட வேண்டும் என்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிலைமைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்த மக்களை பொறுத்தவரை 99 வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர்.

கண்காணிப்புக் குழுவுக்கு இடமில்லை இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை கண்காணிக்கும் பொருட்டு மனித உரிமைப் பேரவையின் ஆலோசனயை பெற வேண்டும் எனவும் பேரவை கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேரணையின் மூன்றாவது பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறு கண்காணிப்புக் குழுக்கள் செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது என்பதனை ஜெனீவாவில் தெளிவாக குறிப்பிட்டுவருகின்றோம். எமது நாடு தனித்துவ ரீதியில் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் எட்டப்படும் எவ்வகையான முடிவையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. இதனை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டார்.
அதாவது வாக்கெடுப்பில் எவ்வாறான முடிவு கிட்டும் என்று எம்மால் தற்போது கூற முடியாது.

பலமான நாட்டின் பிரேரணை பலமான நாடு பிரேரணையை கொண்டு வந்துள்ளதால் சில நாடுகள் மனச்சாட்சிக்கு விரோதமாக எமக்கு எதிராக வாக்களிக்கலாம். உண்மையில் அந்த நாடுகளுக்கு எமது நிலைமை புரிந்திருக்கும். இலங்கை சிறிய நாடு. அதனால் பொருளதார அரசியல் பிராந்திய அழுத்தங்கள் காரணமாக எமக்கு எதிராக சில நாடுகள் வாக்களிக்கலாம்.

ஆனால் ஜெனீவாவில் எவ்வாறான முடிவு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இந்த தருணத்தில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் எங்களை கவலைகொள்ள செய்துள்ளன.

இலங்கையின் விவகாரங்களுக்கு உள்நாட்டு ரீதியிலேயே தீர்வுகாணப்படும். அந்த வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கண்காணிப்புக் குழுவுக்கு இடமளிக்க முடியாது. அதாவது எந்தத் தரப்பிடம் நாங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் கோரலாம். ஆனால் பலவந்தமாக அவற்றை திணிக்க முடியாது. எமக்குத் தேவைப்படின் நாங்கள் கேட்போம். மாறாக கேட்காமல் பலவந்தமாக வழங்க முன்வர வேண்டாம். அதனை நாங்களே தீர்மானிக்க வேண்டும். உதவிகளையோ ஒத்துழைப்புக்களையோ நாங்களே தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு வெளிநாட்டுக் குழுக்களுக்கு கண்காணிப்பில் ஈடுபட இடமளித்தால் நாட்டில் மீண்டும் பயங்கரவாத பிரச்சினை உருவாகிவிடும். நாட்டின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது புலம் பெயர் தமிழ் மக்களும் புலனாய்வு பிரிவை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சரவையை நிறுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மீண்டும் நாட்டுக்குள் வந்து பாரிய பிரச்சினைகள் உருவாகிவிடும். எனவே அதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் பல்வேறு விடயங்களை பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு விரல் நீட்டப்படுவதை அனுமதிக்க முடியாது.

கேள்வி: அமெரிக்காவின் உற்பத்திகளை பகிஷ்கக்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளாரேர?

பதில்: அது அரசாங்கத்தின் கருத்தல்ல என்பதனை குறித்துக்கொள்ளுங்கள் 

கேள்வி: டொலர்களையும் பயன்படுத்த மாட்டீர்களா?

பதில்: அவ்வாறு செய்ய முடியுமா?

கேள்வி: குறித்த அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்தில் அமெரிக்க பொருள் பகிஷ்கரிப்பு குறித்து அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்தாரா?

பதில்: இல்லை அவர் அமைச்சரவைக்கு வரவில்லை.

கேள்வி: எனினும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே அவ்வாறு கூறியுள்ளார்?

பதில்: ஆளும் கட்சிக்குள் பல கட்சிகள் உள்ளன. அவரவர் பல கருத்துக்களை வெளியிடலாம்.

கேள்வி: உங்களுக்கு ஜீ.மெயில் இல்லையா?

பதில்: இருக்கின்றது.

கேள்வி: அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்குமாறு அரசாங்க அமைச்சர் கூறியுள்ளதாகவே வெளிநாடுகளில் செய்திகள் பரவுகின்றன.

பதில்: அதனை நீங்கள் திருத்துங்கள்.

கேள்வி: கொலன்னாவை சம்பவம் பற்றி?

பதில்: இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரை தேடி இராணுவம் அப்பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது குறித்த பிரதேசத்தில் விளையாட்டுப் போட்டி ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இராணுவ வேன் அந்த இடத்துக்குச் செல்ல அங்கிருந்த குறித்த அரசியல்வாதி தன்னை நோக்கி வேன் வருவதாக கூறியுள்ளார். இது தவறுதலாக அவர் புரிந்துகொண்ட விடயமாகும். காரணம் அரசியல் ரீதியில் அந்த அரசியல்வாதிக்கு சிலருடன் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகின்றது. அதனால் அவ்வாறு கூறியுள்ளார். மாறாக அவரை கடத்த முயன்றதாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை நிராகக்கின்றோம்.

கேள்வி: ஏன் வெள்ளை நிற வேனில் செல்ல வேண்டும்?

பதில்: இராணுவத்திடம் அப்போது இருந்த வேனில் சென்றுள்ளனர்.

@கள்வி: வேனில் ஆயுதங்கள் இருந்தனவா?

பதில்: அப்படி எதுவும் இருக்கவில்லை.

கேள்வி: அப்படியானால் பிரதேசத்தின் பொலிஸ் அதிகாரி ஏன் மாற்றப்பட்டார்?

பதில்: நிலைமையை சமாளிக்க முடியாததால் மாற்றப்பட்டார்.

கேள்வி: எனினும் மாற்றத்துக்கு இந்த சம்பவம் காரணம் அல்லவென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளாரே?

பதில்: அதாவது இதற்கு முன்னர் இடம் பெற்ற பல சம்பவங்களிலும் நிலைமையை சமாளிக்கத்தான் தொடர்ச்சியாக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டார்.

கேள்வி: இராயப்பு ஜோசப் ஆண்டகை அரசியலமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்றும் அமைச்சர்கள்  இருவர் தெவித்துள்ளனரே?

பதில்: அது தொடர்பில் எனக்குத் தெரியாது.

கேள்வி: ஆண்டகை ஏதாவது அவ்வாறு கூறியுள்ளாரா?

பதில்: அது தொடர்பில் எனக்குத் தெரியாது. ஆனால் பாதிரியார் ஒருவர் சட்டவிரோதமாக காட்டை அழித்துக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கேள்வி: யார் அவர் ?

பதில்: எனக்கு சரியாக தெரியவில்லை. கூறவும் முடியாது. ஆனால் இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் கர்தினாலுக்கு அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. அதனை வேறுவிதமாக திருப்பிவிடுவார்கள்.

கேள்வி: எங்கே இவ்வாறு காடழிக்கப்படுகின்றது?

பதில்: மன்னார் அல்லது மட்டக்களப்பு பகுதியில் என்று அறிகின்றேன்.

கேள்வி: மன்னாரிலா மட்டக்களப்பிலா?

பதில்: எனக்கு சரியாக தெரியாது. ஆனால் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறுகின்றது.

No comments:

Post a Comment