Translate

Tuesday, 6 March 2012

வியூகம் வகுத்த முதல்வர் ஜெயலலிதா: வைகோவும் விஜயகாந்தும் தப்புவார்களா?

வியூகம் வகுத்த முதல்வர் ஜெயலலிதா: வைகோவும் விஜயகாந்தும் தப்புவார்களா?
வருகின்ற மார்ச் 18ஆம் திகதி நடைபெறவிருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா தவிர அனைத்து அமைச்சர்களும் தமிழகத்தின் தென்மாவட்டத் தொகுதியான சங்கரன்கோவிலில் முகாமிட்டு வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள்.
சங்கரன்கோவிலில் முகாமிட்டு வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இரு துருவங்களாக செயல்பட்டு வரும் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியும் தேர்தல் களத்தில் இணைந்து பிரசாரம் செய்கிறார்கள்.
பிறந்த ஊரான கலிங்கப்பட்டி இருக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தன்னை தொகுதி மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கேயே முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகிறார். தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். "உங்களால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நிற்க முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா?" என்று அ.தி.மு.க. விட்ட சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என்று நினைத்து நான்காவதாக களத்தில் இறங்கியுள்ளார் விஜயகாந்த். இந்த நால்வர் தவிர பா.ஜ.க.வும் தன் பங்கிற்கு வேட்பாளரை நிறுத்தி விட்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்து இருக்கிறது.

அ.தி.மு.க. சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவஹர் சூர்யகுமார் ஆகியோர் வேட்பாளர்கள். ம.தி.மு.க. சார்பில் சதர்ன் திருமலைக்குமாரும், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமாரும் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு மின் வெட்டு பிரச்சினை தொகுதிவாசிகளை வாட்டி எடுத்தாலும், இப்போதைக்கு இடை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதன் தாக்கம் குறைவு. ஏனென்றால் மற்ற பகுதிகளில் இருப்பது போல் இங்கு கடுமையான மின்வெட்டு இல்லை. அரசின் நலத்திட்ட உதவிகள் ஜரூராக மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.
இலவச மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் இந்த உதவிகளில் அடக்கம். இப்படி வேட்பாளர்கள் அனைவரும் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில் கட்சிகளின் தலைவர்கள் என்ற வரிசையில் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எல்லோரும் விரைவில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடப் போகிறார்கள். இடைத் தேர்தல் - பொதுத் தேர்தல் போல் ரொம்பவுமே பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சங்கரன்கோவில் தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் "கேட்ச்-22" சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தொகுதியில் மாநிலத்தின் அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்தே 1996 தேர்தலுக்கு முன்பு வரை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர். - தி.மு.க.விலிருந்து விலகிய போதே தி.மு.க. ஜெயித்த தொகுதி இது. ஏனென்றால் வைகோ தி.மு.க.வில் இருந்தார். ஆனால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது கொடியங்குளத்தில் நடைபெற்ற பொலிஸ் தாக்குதலுக்குப் பிறகு 1996இலிருந்து இந்த தொகுதியில் ஜாதிகள் அடிப்படையில் வாக்குகள் பிரிந்து நிற்கின்றன.
குறிப்பாக இங்கு தி.மு.க.வின் வாக்கு வங்கி தேவேந்திர குல வேளாளர் வாக்குகளாகவும், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி தேவரின வாக்குகளாகவும் உள்ளன.

வைகோவின் சொந்தங்கள் இந்த தொகுதியில் அதிக அளவில் இருப்பது அவருக்கு சாதகமான அம்சம். தி.மு.க.விற்கு என்று இருந்த தேவேந்திர குல வேளாளர் வாக்கு வங்கியை புதிதாக கட்சி தொடங்கிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அசைத்து பார்த்தார். ஆனால் காலப்போக்கில் அவருடையை அரசியல் நடவடிக்கைகளால் அந்த சமுதாயம் ஈர்க்கப்படவில்லை. "கொடியன்குளம் கலவரம்", "தேவரினத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வரானது", "பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம்", "சசிகலா - அ.தி.மு.க.வின் அதிகார மையத்தில் இருந்தது" எல்லாம் தேவேந்திர குல வேளாளர் வாக்காளர்களை தொடர்ந்து தி.மு.க. பக்கமே இந்த தொகுதியில் நிற்க வைத்தது. இந்த நிலைமை சசிகலா வெளியேற்றத்தால் இப்போது மாறும் வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் நின்று இரு எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. இப்போது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. சசிகலா வெளியேற்றத்தால் ஏதேனும் தேவரின வாக்குகளில் அ.தி.மு.க.விற்கு பிரச்சினை ஏற்படுமென்றால் அதை சரிக்கட்டவே டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தாழ்த்தப்பட்டோர் 6 பேர் கொல்லப்பட்ட பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு சங்கரன்கோவில் தேர்தலை மனதில் வைத்து கடைப்பிடிக்கப்பட்ட யுக்தி.

தி.மு.க.வை பொறுத்தவரை தேவரின வாக்குகளை மையமாக வைத்தே தி.மு.க. தலைவர் கருணாநிதி சசிகலா வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல சசிகலாவோ, அவரது கணவர் நடராஜனோ முன்வரவில்லை என்பதால் இப்போது "சசிகலா வெளியேற்றம் ஒரு நாடகம்" என்ற ரீதியில் கருத்துச் சொல்ல தொடங்கி விட்டார்.
ஏற்கனவே தன் பக்கம் நிற்கும் தேவேந்திர குல வாக்காளர்களை, சசிகலாவை முழுவதும் ஆதரித்து சங்கரன்கோவில் இடை தேர்தலில் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை அவர் என்பதே இதன் பின்னணி. சசிகலாவை ஆதரித்து பேசினால் தேவரின வாக்குகள் தி.மு.க.விற்கு அதிகமாக கிடைக்கும் என்று நம்புவதற்கு இல்லை. ஆனால் அதனால் தொன்று தொட்டு கிடைத்து வரும் தேவேந்திர குல வேளாளர் வாக்காளர்களை இழந்து விடக்கூடாது என்ற கவலை தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது.
அதேபோல் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தால், கடந்த 6 பொது தேர்தல்களில் (2011 தவிர) அ.தி.மு.க.விற்கு பெருமளவில் வராத தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் முற்றிலும் வந்து விடும் என்று அ.தி.மு.க. தலைமையும் நம்புவதற்கு இல்லை. ஆனால் இப்படி செய்வதால், சசிகலாவின் வெளியேற்றத்தையும் மீறி அ.தி.மு.க.வுடன் நிற்க விரும்பும் தேவரின வாக்குகளை பகைத்துக் கொள்ள நேரிடும் அபாயம் இருக்கிறது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமைக்கு இருக்கும் இந்த சிக்கல்தான் அக்கட்சிகளை சங்கரன்கோவில் இடை தேர்தலில் "கேட்ச்-22" சூழலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

இந்த நிலைமைகள் ஒரு புறமிருக்க, சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் சங்கரன்கோவில் தொகுதி வித்தியாசமான முடிவை கொடுத்திருக்கிறது. கட்சி சின்னங்களின் அடிப்படையில் போட்டியிட்ட உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் போட்டியிட்டதன் அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. இங்கு சுமார் 46,000 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. தனியாக போட்டியிட்ட காலத்தில் 30893, (1996 தேர்தல்), 20668 (2001 தேர்தல்) வாக்குகளை இந்த தொகுதியில் பெற்ற வைகோவின் கட்சி இப்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 23,000 வாக்குகளுக்கு மேல் வாங்கி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இத்தனைக்கும் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் இந்த தொகுதியில் வைகோவின் கட்சி போட்டியிடவில்லை. தி.மு.க.வோ இந்த தொகுதியில் சுமார் 22,000 வாக்குகள் பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 2011 சட்டமன்ற தேர்தலில் இங்கு 61,000 வாக்குகளை பெற்ற தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் கூட 28,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
அக்கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் ஏறக்குறைய 33,000 வாக்குகள் எங்கே போனது என்பதே புதிராக இருக்கிறது. ஆனால் விஜயகாந்தை பொறுத்தமட்டில் உள்ளாட்சி தேர்தலில் 13,000 வாக்குகளை பெற்றிருக்கிறது. ஏற்கனவே 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது அக்கட்சி பெற்ற 11,300 வாக்குகளை விட இது அதிகம். ஆகவே உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி பார்த்தால் சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. முதலிடத்திலும், தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது இடத்திலும், ம.தி.மு.க. மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
காங்கிரஸார் தி.மு.க.விற்காக வாக்களிக்க தவறினால் அ.தி.மு.க. அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது ம.தி.மு.க.தான். ஆனால், விஜயகாந்த் வீம்பாக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்து வேட்பாளரை நிறுத்தியுள்ளார். இங்கு அவர் நான்காவது இடத்திற்கு சென்றால், "நான்தான் அ.தி.மு.க.விற்கு மாற்று" என்ற அவரது பிரசாரம் அடிபடும். அதைவிட முக்கியமாக "என்னால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது" என்ற பிரசாரமும் தவிடு பொடியாகும்.

அதைவிட முக்கியமாக நாயுடு சமுதாயத்தினர் கனிசமாக இருக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் வைகோவை விட விஜயகாந்த் பலமில்லாதவர் என்பது நிரூபனமாகும். "போட்டியிட தயாரா" என்று அ.தி.மு.க. தலைமை விட்ட சவாலை அவசரப்பட்டு ஏற்றுக் கொண்டு விட்டார் விஜயகாந்த் என்பதே சங்கரன்கோவில் தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைமை.
சங்கரன்கோவில் இடை தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.விற்கு "எந்த கூட்டணியும் இல்லாமல் ஜெயிக்கிறோம்" என்ற பிரசாரத்திற்கு தீணி போடும். ஆனால் அக்கட்சி வேட்பாளர் வாங்கும் வாக்கு வித்தியாசம் எவ்வளவு இருக்கப் போகிறது என்பது முக்கிய அம்சமாக அலசப்படும். தி.மு.க. இரண்டாவது இடத்திற்கு வரமுடியாத சூழல் உருவானால், "ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து பிரசாரம் செய்தே சரிப்படவில்லை.
தி.மு.க.வின் மீது ஏற்பட்ட சட்டமன்ற தேர்தல் வெறுப்பு இன்னும் மறையவில்லை" என்பதை பறை சாற்றும். ம.தி.மு.க. இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டால், அக்கட்சியின் எதிர்கால கூட்டணிக்கு "நிச்சயதார்த்தம்" நடக்கும். விஜயகாந்த் இத்தொகுதியில் நான்காவது இடத்திற்கு போனால் அது அவரது அரசியல் பயணத்தில் தர்மசங்கடத்தையே உருவாக்கும். தி.மு.க. ஆட்சியிலிருந்த போது இதே மாதிரி இடைத் தேர்தல் தோல்விகள் அக்கட்சிக்கு ஏற்பட்டாலும், விஜயகாந்த் தன் வாக்கு வங்கியை இழந்து விடவில்லை என்பது மட்டுமே சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் - தே.மு.தி.க.விற்கு சற்று ஆறுதல் தரும் செய்தி.

சங்கரன்கோவில் தொகுதியில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும் அளவிற்கு வியூகம் வகுத்து ஐந்து முனை போட்டியை உருவாக்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. சொந்த தொகுதியில் போட்டியிடும் வைகோவும், சவாலை சந்தித்துள்ள விஜயகாந்தும் இந்த வியூகத்திலிருந்து தப்புவார்களா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள அட்டகாசமான கேள்வி

No comments:

Post a Comment