
இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி, தமிழகத்தில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள், அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ மக்கள் இந்த தீர்மான வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய செய்தி காட்டூத் தீ போல நேற்று மாலையில் தமிழகம் முழுவதும் பரவியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
அதேபோல மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வக்கீல்கள் திரண்டு இனிப்புகளை வழங்கினர். அதேபோல சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மாணவர்களும் இனிப்புகளை வழங்கியும், இலங்கையைக் கண்டித்து கோஷம் எழுப்பியும், இந்திய அரசைப் பாராட்டியும் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் பெரும் உற்சாகம் காணப்பட்டது. எங்களது இத்தனை கால அவதிகளுக்கும் இப்போதுதான் வழி பிறந்துள்ளது. இலங்கையை தண்டிக்கும் நடவடிக்கைகளில் இதுதான் முதல் படி. இதைத்தான் நாங்கள் இத்தனை காலமாக எதிர்பார்த்திருந்தோம் என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிய பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
No comments:
Post a Comment