இலங்கைத் தமிழர்களுக்கு நீதி நிச்சயம் - ஜெயலலிதா:
தமிழீழம் காணும் வரை போராடுவேன் - கருணாநிதி
ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்ககும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில்,
ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதற்காக உலகத் தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்; தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மூலமாக தமிழர்கள் சார்பாக இந்திய அரசுக்கு நான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவந்தேன். மேலும் பிரதமருக்கு கடிதங்களும் எழுதினேன். அ.தி.மு.க. எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை எழுப்பினார்கள். இவற்றுக்கெல்லாம் இப்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்
. இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். அதற்கான முதல் நடவடிக்கைதான் இது. அதற்காக உலகத் தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் எனக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியதால், இலங்கையில் உடனடியாக எந்தமாதிரியான நெருக்கடி ஏற்படும்? எனக் கேட்கப்பட்ட போது, அவர் அங்கு இப்போதே மிரட்டல், பயமுறுத்தல்கள் எல்லாம் அங்கேயுள்ள சிங்களவர்களால் தமிழர்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. இதன்மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நம்முடைய பிரதமருக்கு "பேக்ஸ்'' மூலமாக கேட்டுக் கொண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன்.<
இந்த முடிவினை எடுக்க மத்திய அரசுக்கு தற்போது தி.மு.கழகம் கொடுத்த அழுத்தத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கொடுத்திருக்கலாமே? எனக் கேட்கப்பட்ட போது, அவ்வாறான அழுத்தத்ததை அப்போதே கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் ஈழம்தான் தான் குறிக்கோள். கடந்த காலத்திலே "உங்களுடைய நிறைவேறாத கனவு என்ன'' என்று என்னிடம் செய்தியாளர்களால் கேட்கப்பட்ட போது, "தமிழ் ஈழம் தான்'' என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே அந்த கனவு நிறைவேறுகிற வரை, அது உருவாகிற அளவுக்கு என்னுடைய போராட்டமும் இருக்கும். பிரபாகரனின் போராட்டம் தவறல்ல. சகோதரச் சண்டையே தவறானது எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment