Translate

Friday, 23 March 2012

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்?


ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததாக அர்த்தம் இல்லை . ஏனெனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையின் எதிர்கால நல்வாழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில் சில வாசகங்களை இந்தியா சேர்த்த செயல் அதற்கு ஆதாரம்.


ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா மேற்கொண்ட நிலை இலங்கையை சற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தமிழகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியா இம்மாதிரி முடிவை எடுத்தது என்று பேசப்படுகிறது. தீர்மானம் கொண்டு வரப்படும் வரை, இந்தியா தனக்குத் தான் ஓட்டளிக்கும் என இலங்கை மிகவும் நம்பிக்கையுடன் கூறி வந்தது. கடந்த மாதம் முதல் அத்தகைய பிரசாரம் இலங்கை அமைச்சர்கள் பலராலும் அதிகளவில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. காரணம் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிரான தீர்மானம் எதையும் இந்தியா ஆதரித்தது கிடையாது. ஆனால் இந்த ஒரு மாத கால இடைவெளியில் இந்தியாவில் ஏற்பட்ட சில நிகழ்வுகள், மத்திய அரசு இந்த விஷயத்தில் தனது முடிவை மாற்றுவதற்கு ஏதுவாக அமைந்தன.

பத்திரிகைகள் காட்டம்: தீர்மானம் வெற்றி பெற்றது, இலங்கையின் முயற்சி தோல்வி அடைந்தது குறித்து மிகவும் வருத்தத்துடனும் கோபத்துடனும் கருத்துக்களை வெளியிட்டுள்ள இலங்கைப் பத்திரிகைகள், இந்த தோல்வி இந்தியாவிற்குத் தான் என காட்டமாகத் தெரிவித்துள்ளன. தனது முடிவின் மூலம் அண்டை நாடு ஒன்றின் ஆதரவை இந்தியா இழந்து விட்டதாகவும் புலம்பியுள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது மிகப் பெரும் தவறு என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா இன்னும் பலமளிக்கும் என்றும், ஆரூடம் கூறியுள்ளன. அரசு ஆதரவு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள், அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்து விட்டதாக கவலை தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கையை கோபத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், இலங்கை பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு வெளியுறவுப் பொõறுப்பில் உள்ள அமைச்சர் குணசேகர, "நமக்கு எதிராக சில உறுப்பு நாடுகள் ஓட்டளித்தது குறித்து நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்நாடுகள், போரை நிறுத்த முயன்றதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு வாழ்வளிக்க விரும்பியவை தான். நம் அண்டை நாடுகள், தமது உள்நாட்டு நெருக்கடிகளால் நமக்கு எதிராக ஓட்டளித்தன' எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமெரிக்க தீர்மானத்தில், மூன்றாவது பிரிவில் இந்தியா கடைசி நேரத்தில் கொண்டு வந்த திருத்தம், இலங்கைக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்பதை "தி ஐலேண்ட்' பத்திரிகை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இந்தியப் பிரதிநிதி தீர்மானம் குறித்து பேசாதததும் வரவேற்கப்பட்டிருக்கிறது.

திருத்தம் ஏன்? இந்த விமர்சனங்களை எதிர்பார்த்தே இந்திய தரப்பில் நேற்று விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாகவும், 2009ல், மனித உரிமைக் கவுன்சிலில் தான் நிறைவேற்றுவதாகக் கூறிய நல்லிணக்க நடவடிக்கைகளை நிறைவேற்ற இலங்கைக்குத் தற்போது ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தீர்மானத்தை ஆதரித்ததாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே, தீர்மானத்தில், இலங்கை விரும்பினால் தான் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் தனது உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை அளிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் தான் கொண்டு வந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. அதோடு, இரு நாடுகளுக்கும், மொழி, மதம், இன ரீதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு உறவின் அடிப்படையில், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

இதை ஒரே வரியில் கூற வேண்டுமானால், சர்வதேச சமூகத்திடம் இலங்கை உறுதியளித்ததற்கு, நல்லிணக்க நடவடிக்கைளையும், நல்லிணக்க ஆணைக் குழுவின் பிற பரிந்துரைகளையும், இந்தியாவின் உதவித் திட்டங்களை அமல்படுத்துவதையும் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆமை வேகத்தில் செய்து வந்ததுதான் அந்நாட்டின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கையின்மை ஏற்படக் காரணம். இக்கருத்தையே அமெரிக்காவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மூன்று ஆண்டுகள் சர்வதேச சமூகம் அவகாசம் கொடுத்தும் கூட இலங்கை தனது நல்லிணக்கப் பணிகளில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இவ்விஷயத்தில் இரு நாடுகளும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை.

மாறிவிட்டதா கொள்கை? இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா ஓட்டளித்தது ஏற்கனவே இந்தியா பின்பற்றிய அணிசேராக் கொள்கைக்கு எதிரானது அல்ல. ஏனெனில் நேரு காலத்தில், பின்பற்றப்பட்ட கொள்கை நடைமுறையில் இன்று இல்லை. அந்த இயக்கம் முடங்கிப் போய் உருத் தெரியவில்லை.அக் கொள்கையைப் பின்பற்றிய எகிப்து கதி என்ன? இன்று உலகே மாறி இருக்கிறது. "சார்க்' நாடுகள் என்ற கோணத்தில் இந்தியா செய்தது சரியா என்றால், "சார்க்' கொள்கை அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளிப்பதுடன், சலுகை வர்த்தகத்தையும் அனுமதித்திருக்கிறது. அதனால் தான் அமெரிக்க தீர்மானத்தை அப்படியே ஆதரிக்காமல், இலங்கை நல்லிணக்க வாழ்வை வலியுறுத்தியது. மேலும், தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று பலமற்ற இயக்கமாக காட்சியளிக்கலாம். ஆனால் புலி ஆதரவு சக்திகள் இல்லாத சூழ்நிலையில், அங்கு வாழும் லட்கணக்கான தமிழர்களுக்கு கவுரவ வாழ்வு தரும் பொறுப்பை இலங்கை அதிபர் ராஜபக்ஷே தட்டிக்கழிக்கமுடியாது. தமிழர்கள் பகுதியில் தேர்தல் நடத்தினாலும், போருக்குப் பின் நல்லிணக்கவாழ்வு அமைய ஏற்படுத்தப்பட்ட குழுவின் ஆலோசனைகள், காலக்கெடுவுடன் நிறைவேற்றப்பட்டதா என்பதை உறுதி செய்யாதவரை இந்தியா நடவடிக்கை ஒரு பாடமாக அமையும். மேலும், ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள சீனாவும், அருகில் உள்ள ஜனநாயக இந்தியாவும் இவ்விஷயத்தில் மேற்கொண்டு வரும் அணுகுமுறையை இலங்கை இனி உணர வேண்டும் என்பதும் தூதரக விவகாரங்கள் தெரிந்தவர்கள் கருத்து.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment