சென்னை: ""அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டுள்ளது'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, கொலை செய்வது போன்ற காரியங்களில், ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறலாகும். போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதோ போர்க்குற்றம் ஆகும். கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசு, தமிழின படுகொலையை செய்ததன் மூலம், இத்தகைய குற்றங்களை செய்துள்ளது. இலங்கை புரிந்துள்ள இந்த குற்றங்களை, ஐ.நா., மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும்என,அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதில், இந்தியா தலையிட்டு, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தன் விருப்பத்திற்கு ஆலோசனை கூறவோ அல்லது பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பவோ கூடாதென்றும், இலங்கை அரசின் சம்மதத்தை பெற்றபிறகு, ஐ.நா., செயல்படவேண்டும் என்றும் தீர்மானத்தை திருத்தியுள்ளது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி, ஐ.நா., மனித உரிமைக்குழு எதை செய்தாலும், அதை இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும், என்று இருந்தது. ஆனால், இந்தியாவின் திருத்தம், இலங்கை அரசின் சம்மதம் இன்றி, ஐ.நா., மனித உரிமைக்குழு எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, திருத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்ககூடாது என்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம், தன் சொந்த மக்களை கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்ககூடாது. அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டது. தீர்மானத்தை திருத்தியதன் மூலம், தங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சலுகையை செய்துள்ளதாக, இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், இலங்கை அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என்றாலும், கண்காணிப்பிற்கு ஆளாகியுள்ளது என்பது திருப்தியளிக்கிறது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment