Translate

Thursday 29 March 2012

பிரித்தானியாவில் பெற்றோல் இல்லை: கார்கள் ஸ்தம்பிதம் !


பிரித்தானியாவில் பெற்றோல் இல்லை: கார்கள் ஸ்தம்பிதம் !
பிரித்தானியாவில் எங்கு பார்த்தாலும் காணக்கூடிய வியாபார நிலையம் எது என்று கேட்டால், அது எரிபொருள் நிரப்பும் நிலையம் தான். பல்லாயிரக்கணக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பிரித்தானியாவில் இருந்தாலும், தற்போது அனேகமான இடங்களில் பெற்றோல் இல்லை. மக்கள் அல்லாடும் நிலை தோன்றியுள்ளது. பல பெற்றோல் நிலையங்களைப் பொலிசார் வலுக்கட்டாயமாக இழுத்து மூடியுள்ளனர் என்ற செய்தியும் தற்போது கசிந்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் என்ன ??? என்று கேட்டால் பிரித்தானியாவின் அமைச்சரவைதான் ! இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், தற்போது தனியார் பெற்றோல் நிலையங்களில் தான் அதிகப்படியான் பெற்றோல் கையிருப்பில் உள்ளது. அவர்கள் அதனை லீட்டருக்கு 1.52 பவுண்டுகளுக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

பிரித்தானியா பெற்றோல் இன்றித் தவிக்க காரணம் தான் என்ன ?


பிரித்தானியாவில் உள்ள தொழிற்சங்கம், அதிலும் குறிப்பாக எரிபொருள் நிரப்பிய பார ஊர்திகளை ஓட்டுவோர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவிக்க இருந்தது தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல ! தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை இன்னும் அறிவிக்கவே இல்லை என்பது தான் உண்மை நிலை ஆகும். அதற்கு முன்னதாகவே பிரித்தானிய அமைச்சர் ஒருவர் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அதாவது உங்கள் காருக்கு புல்-டாங் பெற்றோலை அடியுங்கள், முடிந்தால் பெற்றோல் கேனில் கூட பெற்றோலை அடித்து உங்கள் வீட்டில் வைத்திருங்கள் என்று. இச் செய்தியானது காட்டுத் தீ போல பிரித்தானியா எங்கும் பரவ ஆரம்பித்தது. வழமையாக கால்-டாங், அரை-டாங், பெற்றோலை அடித்துக்கொண்டு ஓடித்திரிந்தவர்கள் எல்லாரும் முழு-டாங் பெற்றோலை அடிக்க ஆரம்பித்தனர்.

போதாக்குறைக்கு பெற்றோல் கேன்களையும் வாங்கி அதிலும் அடித்தனர். கடந்த 3 தினங்களில், பெற்றோல் கேன் விற்பனை 500 மடங்கு அதிகரித்துள்ளதோடு, இனி எந்தக் கடைகளிலும் அது இல்லை (தீர்ந்துவிட்டது) என்ற நிலை தோன்றியுள்ளது. அதுமட்டுமல்லாது 3 தினங்களில் பிரித்தானிய அரசுக்கு பெற்றோல் வரிப்பணமாக சுமார் 33 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளதாம். இன்னும் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தத்தை, ஏதோ அது வந்துவிட்டது போலக்காட்டி, மக்களை பிழையான பாதையில் வழிநடத்திய பிரித்தானிய அரசின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தேவையில்லாமல் ஒரு பிரச்சனையைக் கிளறி அதனைப் பூதாகரமாக்கி உள்ளனர். மக்களை பதற்றத்துக்குள் தள்ளியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது பல்லாயிரக் கணக்கான மக்கள் வீட்டில் தற்போது பெற்றோல்,.... பெற்றோல்-கேன்களில் உள்ளதாம். இதனால் பல விபத்துகள் நேரலாம் எனப் பொலிசாரும் தீ அணைக்கும் படையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் மக்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவசரப்பட்டு காரின் பெற்றோல் டேங்கை நிரப்புவதால் எவ்வித பலனும் இல்லை. எப்படி இருந்தாலும் அரசாங்கம் தொழிற்சங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தே ஆகவேண்டும். எனவே பெரும்பாலும் வேலை நிறுத்தம் வராது என்று அரசியல்வாதிகள் கருதுகின்றனர். அதுவும் தற்போது மக்கள் உள்ள மனநிலையில் உண்மையாகவே ஒரு வேலைநிறுத்தம் வந்தால், பிரித்தானிய அரசே கவிழும் நிலை தோன்றலாம் !

No comments:

Post a Comment