Translate

Sunday 25 March 2012

அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? – இதயச்சந்திரன்


அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? – இதயச்சந்திரன்

ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது.
அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன. நல்லிணக்க ஆணைக் குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது.

அதேவேளை, பெரும் படை பரிவாரங்களோடு ஜெனீவாவில் களமிறங்கிய ஆட்சியாளர்கள், நாடு திரும்பும்போது நிச்சயம் செங்கம்பள வரவேற்பு இருக்காது என நம்பலாம்.
இப் பிரேரணையானது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் முதலாம் பாகம் மட்டுமே. இனி ஆரம்பமாகப் போகும் இரண்டாம் பாகத்தில் பல மோதல்கள் உருவாகலாம்.
அதற்கான அடிக்கல்லை ஐ.நா. சபை விவாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் நாட்டி விட்டன. குறிப்பாக, அமெரிக்கா எதனைக் கொண்டு வந்தாலும் அதனைக் கண்ணை மூடியவாறு எதிர்க்கும் நிலைப்பாடுடைய கியூபா, பிரேரணை குறித்த விவாதத்தில் நிகழ்த்திய உரைகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
அதுமட்டுமல்லாது, சீனா, ரஷ்யா போன்ற அமெரிக்க எதிர்ப்பு அணிகளும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தலையிடாமல் இறைமையுள்ள நாட்டிற்கு உதவி புரிய வேண்டுமென அறிவுரை கூறின.
அங்கு உரையாற்றிய பங்களாதேஷ் மற்றும் கியூபா நாட்டு பிரதிநிதிகள் இலங்கையின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், பயங்கரவாதத்தை ஒழித்த நட்பு நாடான இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட இப் பிரேரணை வழிவகுப்பதால், இதனை எதிர்க்கின்றோமென வாதிட்டார்கள். ஆனால் வாக்கெடுப்பு நிகழ்ந்த போது நிலைமை தலை கீழாக மாறியது.
ஆதரவளித்த நாடுகளில் இந்தியா, லிபியா போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரு நாடுகளும் தமக்கு ஆதரவளிக்குமென இறுதிவரை நம்பியிருந்தது இலங்கை அரசு. வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்ட நாடுகளில் மலேஷியாவும் இணைந்து கொண்டது இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும்.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் அரபு எழுச்சிக்கு அமெரிக்காவோடு இணைந்து அனுசரணை வழங்கும் கட்டாரும், சவூதி அரேபியாவும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
இதற்கெதிராக வாக்களித்த நாடுகளில் குறிப்பாக இந்தோனேஷியா, குவைத், பிலிப்பைன்ஸ், கட்டார், தாய்லாந்து மற்றும் சவூதி அரேபியா போன்றவை. உலக ஒழுங்குச் சமநிலையில் அமெரிக்காவின் பக்கம் அதிகமாகச் சாய்ந்திருப்பவை.
இருப்பினும் உலகின் மிகப் பெரிய வல்லரசாகவும் நட்பு நாடாகவும் உள்ள அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை, இவர்கள் எதிர்த்த விவகாரம் மாறிவரும் உலக ஒழுங்கின் புதிய பரிமாணத்தை இலேசாக உணர்த்துவது போலிருக்கிறது.
இருப்பினும் சொந்த நாட்டில், அங்கு வாழும் சிறுபான்மையான தேசிய இனங்களின் மீது அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விடும் நாடுகள், இவ்வாறான பிரேரணைகளை நிராகரிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.
அதேவேளை, இப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட இறுதி வாசகங்களே, பிரேரணை எதிர்ப்பாளர் பலருக்கு உடன்பாடு இல்லாத விடயம் போல் தெரிகிறது. அதில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை உயர் ஆணையாளரின் அலுவலகமானது, இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து, அதனுடன் இணைந்து பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளையும் புலமைசார் தொழில் நுட்ப உதவிகளையும் வழங்குவதோடு, அது குறித்தான அறிக்கையை 22 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கின்ற விடயம் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆணையாளரின் பங்களிப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கின்ற இறுக்கமான வார்த்தை நீக்கப்பட்டதற்கும், இந்தியாவின் ஆதரவிற்கும்  தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. அத்தோடு முற்று முழுதாக இலங்கையின் உறவினை தற்போது முறித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை என்பதை இத் தீர்மானம் குறித்து அது வழங்கிய விளக்கங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இத் தீர்மானத்தை மூலதனமாகக் கொண்டு, தமது அடுத்த நகர்வினை மேற்கொள்ளப்போகும் நாடுகளாக அமெரிக்காவையும் இந்தியாவையும் சுட்டிக் காட்டலாம். 90 பாகையையும் தாண்டி, சீனாவின் பக்கம் சாய்ந்துள்ள இலங்கையை, எவ்வாறு தங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில் திருப்புவது என்பது குறித்து இவர்கள் அதிக அக்கறை கொள்ளப் போகிறார்கள்.
இப் பிரேரணை கூட, இணக்கப்பாட்டிற்காக அழுத்தக் கருவியே தவிர, தெறிப்பிற்கான பொறியல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை, பிரேரணை வெற்றியடைந்தால் தமது இரண்டாவது திட்டம் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை இலங்கை ஆட்சியாளர் நிச்சயம் தீர்மானித்திருப்பார்கள். அமெரிக்கா, இந்தியாவுடன் நேரடியான முரண் நிலையை உருவாக்கி சீனாவின் பக்கம் சாய்வதே சரியென்கின்ற தந்திரோபாய நகர்வினை, இலங்கை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தற்போது சிறிதளவும் இல்லை. நாட்டின் பொருளாதார நிலை அந்தளவிற்கு கவலைக் கிடமாக இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்திடமும் உலக வங்கியிடமும் கையேந்தும் நிலையிலுள்ள இலங்கை அரசு, சீனா காப்பாற்றுமென்கின்ற நம்பிக்கையோடு அமெரிக்காவை உடனடியாகப் பகைத்துக் கொள்ளாது என்பதே உண்மை.
ஏனெனில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா கட்டும் முத்துமாலையில், குவாடர் மற்றும் சிட்வே துறைமுக முத்துகள், உதிர்ந்து போகத் தொடங்கியுள்ளன. இம் மாற்றங்களை நன்கு அவதானிக்கிறது இலங்கை.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தினை ஒட்டிய நாடுகளில் மியன்மாரும் ஆப்கானிஸ்தானுமே இயற்கை மூலவளங்களை அதிகளவில் கொண்டுள்ள நாடுகளாகும். ஆப்கானில் ஒரு ரில்லியன் (Trillion ) டொலர் பெறுமதியான   இயற்கை வளங்கள் புதைந்து கிடப்பதாக அமெரிக்க புள்ளி விபரவியல் ஆய்வுத் திணைக்களம் அண்மையில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே செப்புப் படிவ அகழ்விற்கான ஒப்பந்தத்தில் சீனா கைச்சாத்திட்டுள்ள நிலையில், இரும்புத் தாது அகழ்வில் இந்திய நிறுவனங்கள் பல, உடன்படிக்கைகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர மியன்மாரை (பர்மா) எடுத்துக் கொண்டால் தற்போது சீனாவின் மூலவளப் பசிக்கான இயற்கை வளங்களின் மையமாக அது விளங்குகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, செம்பு, மற்றும் சிறிதளவிலான யூரேனியம் தாதுக்களைக் கொண்ட பெரும் சக்தி மையமது.
இவ்விரு நாடுகளின் செறிவான மூல வளங்கள், இப் பிராந்தியத்தின் புதிய சமநிலையை, எதிர்வரும் காலங்களில் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றும் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்வதாக பிரபல ஆய்வாளர் ரொபேர்ட் கப்லான் (Robert Kaplan) எதிர்வு கூறுகின்றார்.
எதிர்காலத்தில் மலாக்கா நீரிணை ஊடான தனது வர்த்தக போக்குவரத்து, ஆபத்தை எதிர்கொள்ளலா மென்பதை அனுமானிக்கும் சீனா, மியன்மார் துறைமுகங்களை மாற்றுப் பாதைக்கான மையப் புள்ளியாக உருவாக்குவதை அமெரிக்கா புரிந்து கொள்கிறது.
ஆகவே தென் கிழக்காசியாவின் பொருண்மியத் தலைநகராக யுனான் மாகாணத்திலுள்ள குன்மின் (Kunming) பிரதேசத்தை உருவாக்க சீனா எடுக்கும் நகர்விற்கு, மியன்மாரின் இந்து சமுத்திரத்தோடு அண்டிய துறைமுகங்கள் அவசியம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாக அமைகின்றது.
தற்போது அமெரிக்காவும் இந்தியாவும் மியன்மாருடனான உறவினைப் பலப்படுத்த எடுக்கும் முன்னகர்வுகளின் சூத்திரத்தினை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மூலவளங்களுக்காக மட்டுமல்லாது, துறைமுகத்தின் ஊடாக, யுனான் மாகாணத்திற்கான வழங்கல் பாதைகளை அமைப்பதற்கும் மியன்மாரின் கேந்திர முக்கியத்துவம் சீனாவிற்குத் தேவைப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் கனிமப் பொருட்களை சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கு கடல் பாதை சீராகவும் பாதுகாப்பாகவும் அமைய வேண்டும்.
இதில் ஏற்றுமதி வர்த்தகம் 22.93 பில்லியன் டொலர்களைக் கொண்ட, ஆடை மற்றும் சணல் (Jute) உற்பத்தியில் பெரிதளவில் தங்கியிருக்கும் சிறிய நாடான பங்களாதேஷின் சிட்டகொங் துறைமுகமும் சீனாவிற்குத் தேவை.
அதேவேளை, 55 பில்லியன் டொலர் மொத்த உள்ளூர் உற்பத்தியைக்[GDP] கொண்ட, ஆனால் சந்தை முக்கியத்துவமற்ற இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகமும் அதன் தரிப்பிடமும் சீனாவின் வர்த்தக கடல் வழிப் பாதையில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் பொருளாதார ஆதிக்கப் போட்டியில் சீனாவின் எதிர்கால மூலோபாயத் திட்டங்களை எதிர்கொள்வதற்கு ஆப்கானிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற மூலவள முக்கியத்துவமற்ற நாடுகளையும் தமது அணிக்குள் இழுத்து வர வேண்டிய தேவை மேற்குலகிற்கு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதன் ஒரு சிறிய நகர்வாகவே மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட மென் அழுத்தப் பரிமாணமுடைய தீர்மானத்தைப் பார்க்க வேண்டும்.
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியக் கூடாதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க பேரவையில் எச்சரித்தாலும், முத்துக்களைக் கற்களாக மாற்றி சீனாவின் வியூகத்தை உடைப்பதற்கு, அதனைப் பயன்படுத்த முயற்சிக்கிறது அமெரிக்கா என்பதனை அடுத்து வரும் நாட்கள் உணர்த்தலாம்.
நன்றி-வீரகேசரி

No comments:

Post a Comment