Translate

Friday, 30 March 2012

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களை விட ஆக்டிவாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 11 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம். மனஅழுத்தம், முதுகுவலி, இதயநோய், உயர்ரத்த அழுத்தம், வாய்வு கோளாறுகள் ஏற்படுவதே இந்த பிரெசென்டீசம் நோயின் அறிகுறி என்கிறது மருத்துவ அகராதி. வேலை என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதுதான். அந்த வேலையே உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


ஒய்வு இல்லாத வேலை

தினசரி எட்டுமணிநேரம் வேலை ஓய்விற்கு எட்டுமணி நேரம் உறக்கம் என்பது அவசியமானது. ஆனால் ஒருசிலர் வேளைப் பளு அதிகமானதன் காரணமாக தினசரி 11 மணி நேரத்திற்கும் மேலாக கணினியில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களை ப்ரிசென்டீசம் நோய் தாக்குகிறது. ஓய்வு இல்லாத வேலையினால் முதுகுவலி, நரம்பு கோளாறுகள், மன அழுத்தம், செரிமான பாதிப்பு போன்றவையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்தில் 2000 நடுத்தர வயதுடைய ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதை அடுத்து இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியனிலும் வாரத்தில் 48 மணிநேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர். இதுவே இவர்களை நோய்களில் கொண்டுபோய் தள்ளுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரணம்

இதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினமும் ஆபீஸ், டிவி, கம்ப்யூட்டர் என 11 மணி நேரம் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை முதுநிலை ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார். அலுவலகத்தில், டிவி, கம்ப்யூட்டர் முன்பு என அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆக்டிவா இருங்க

நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தை குறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில், கம்ப்யூட்டர், டிவி முன்பு, பஸ், டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளர்.

No comments:

Post a Comment