தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர் இனச்சிக்கல் குறித்து ஐ.நா.மன்றத்திலிருந்து கசிந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
உலக வல்லரசுகளின் சதி வலைக்குள் தமிழீழச் சிக்கலை சிக்கவைப்பதற்கான சூழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்களும், போர்க்குற்றவாளிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என ஒற்றைக்குரலில் ஐ.நா. மன்றத்தைக் கோருகின்றனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு பரிந்துரைத்தவாறு இனவாத இலங்கை ஆட்சியாளர்களை மேற்கண்ட குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழீழ தாயகப்பகுதியிலிருந்து இலங்கைப் படைகள் திரும்பப் பெறப்பட்டு அங்கு இயல்பு நிலையைக் கொணரவேண்டும்.
தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழக்கூடிய ஈழத்தமிழர்களிடம் அவர்களது அரசியல் விழைவை அறிய கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கைச் சிறைகளிலுள்ள விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழீழ அரசியல் சிறையாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்து உலகம் முழுவதும் பல லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்டு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர்.
உலகத் தமிழர்களின் இந்த அடிப்படை மனித உரிமை வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு இனவாத இலங்கை அரசே தனது ஆட்சியாளர்களும் படைத் தளபதிகளும்,உலகச் சட்டங்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளட்டும் என்ற சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சதி செய்து வருவதாக கசிந்து வரும் செய்திகளிலிருந்து தெரிகிறது.
பெற்ற படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் (LLRC) என்ற பெயரில் இலங்கை அரசு நியமித்த விசாரணைக்குழு அறிக்கையின் மீது குறிப்பிட்ட காலவரம்புக்குள் நடவடிக்கை எடுத்து தொடர்புடையவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக ”அத்தீர்மானம்” கூறுகிறது. குற்றவாளியே தன்னை விசாரித்து ஒரு கால வரம்புக்குள் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோருகிற கொடிய தீர்மானம் இது.
ஐ.நா. பொதுச்செயலாளரின் வல்லுநர் குழு அளித்த ஆய்வறிக்கை இலங்கையின் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சிங்கள இனவாதத்தில் தோய்ந்திருப்பதையும் தமிழினத்திற்கெதிரான போர் வெறி ஊட்டப்பட்டிருப்பதையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியது. இலங்கைக்குள் நடக்கிற எந்த வகை விசாரணையிலும் தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்காது என்பதை எடுத்துக்காட்டியது.
இதனால்தான் பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேயும் படை அதிகாரிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா பொதுச்செயலாளர் இதற்கென்று சிறப்பு ஆணையம் அமைத்து நடந்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. இக்கோரிக்கைகளை தொடர்ந்து, விடாமல் வலியுறுத்துவோம். உலக மனசாட்சியின் கதவுகளை அது திறக்குவரை தமிழர்கள் நாங்கள் தட்டுவோம்.
உலக நாடுகள் எங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளும் சனநாயக இயக்கங்களும் தமிழினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இக்கொடிய அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். இத்திசையில் தெளிவோடும் உறுதியோடும் உலகத் தமிழர்கள் தங்கள் முயற்சியை தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment