Translate

Friday, 2 March 2012

ஜெனீவாவில் கூட்டமைப்பின் பங்கேற்பின்மை பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகம்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.


நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அரசாங்கமே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் தேவைக்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணையை கொண்டு வருகிறது.

எனவே தான் இந்தியா மௌனத்தை கடைப்பிடிப்பதோடு பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்தினால் மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் இந்தியா எம்மை அச்சுறுத்துகிறது.

அத்தோடு கூட்டமைப்பினரை ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென்று இந்தியாவே தடுத்துள்ளது. இதன் பின்னணியில் எமது நாட்டுக்கு எதிரான பயங்கரமான சதித்திட்டம் மறைந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைக்கு 6 மாத கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு வழங்கலாம்.

அக்காலஅவகாசத்திற்குள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு இந்தியாவும் அமெரிக்காவும் எம் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும்.

அத்தோடு சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இது இன்று ""தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்ட'' நிலைமையை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
http://www.virakesar...asp?key_c=36892 

No comments:

Post a Comment