Translate

Friday 2 March 2012

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு! தவறு என்கிறார் அமைச்சர் வாசுதேவ


பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை பிழையான செயலாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 22 பேர் அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்த்தப்பட்டனர். இவர்களில் சிங்களவர்கள் 21 பேரும் ஒருவர் முஸ்லிமும் ஆவர். ஒரு தமிழரேனும் பதவியுயர்த்தப்படவில்லை.
இது குறித்து கேட்டபோதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது முற்று முழுக்க பிழையான செயற்பாடாகும்.
இப்பதவிக்கு தகுதியுள்ள தமிழ் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் இணைத்துக் கொள்ளாமை அநீதியான செயலாகும்.
அத்தோடு இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி பாதிக்கப்படும்.
மேலும் மேலும் இனங்களுக்கிடையேயான இடைவெளிகள் அதிகரித்தே செல்லும். எனவே இது தொடர்பில் உடனடியாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதவுள்ளேன். என்றார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவில் அநீதி! தலையிட்டு தீர்வுகாண வேண்டும்!- மனோ கணேசன் 
பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவில் தமிழ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சர்களில் தமிழ் அதிகாரிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 21 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமும் உள்ளடங்குகிறார்கள். இதில் ஒரு தமிழரும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இன ரீதியான ஒதுக்கீடு என்பதைவிட, நேர்முகத்தில் தகுதியை பெற்ற தமிழ் அதிகாரிகளும் பின்தள்ளப்பட்டு, பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்களுக்கு உரிய இடங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையிலும், பெரும்பாலும் சிங்களமயமாக இருக்கின்ற பொலிஸ் துறையில் தமிழர்களுக்கு உரிய இடத்தை பெற்றுத் தரப்போவதாக அடிக்கடி தமிழ் ஊடகங்களில் சொல்லி வருபவர் என்ற முறையிலும் இதில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
உண்மையில் இன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் உரிய தகுதி இருந்தும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்பது அநீதிகரமானது.
எனவே,  தமிழர்களுக்கு உரிய நியமனங்களை வழங்க முடியாவிட்டால் சொல்லிவிட வேண்டும். அதற்காக அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என நடைமுறையாகாத வாக்குறுதிகளை அரசாங்கம் வாரி வழங்கக்கூடாது.
எனது கருத்துக்களையும், கடும் அதிருப்தியையும் அமைச்சர் வாசுதேவாவுக்கு நேற்று காலை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளேன். எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் உடன் இதில் தலையிடுவதாக உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment