Translate

Thursday 29 March 2012

குடாநாடு இராணுவ மயம்


குடாநாடு இராணுவ மயம் 

குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


அங்கு உரையாற்றிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளரும் எம்.பியுமான சுனில் ஹந்துன்நெத்தி தொடர்ந்து பேசுகையில்,

"யுத்தத்தால் இடம் பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றி அம்மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் 'பொறுப்பேற்கும் தன்மையை' நிறைவேற்றாததன் காரணமாகவே இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையையும் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகளும் உருவாக்கம் பெற்றது.

ஒரு குடும்பத்திற்கு 4 இராணுவ வீரர் வீதம் குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியேற்றாது வன்னியில் வேறு இடங்களில் குடியேற்றுகின்றனர். இதனால் தாம் பரம்பரையாக வாழ்ந்த இடங்களையும் தமக்குச் சொந்தமான வாழ்வாதாரத்தையும் மக்கள் இழந்துள்ளனர்.

உண்மையில் அரசாங்கம் மக்களை மீள்குடியேற்றவில்லை. மாறாக பரம்பரை பரம்பரையாக அம்மக்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து வெளியேற்றி நடுத்தெருவில் அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளது.

யுத்தத்தால் சொத்துக்களை, உறவுகளை, அவயவங்களை இழந்து வாழும் மக்களுக்கு மூன்று வருடங்கள் கழிந்தும் நஷ்ட ஈடு வழங்க எவ்விதத் திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவ வீரர்கள் என்ற ரீதியல் வட பகுதி முழுமையாக இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.

தமக்குச் சொந்தமான டிராக்டர்கள் விவசாய உபகரணங்கள் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள்கள் என அனைத்தையும் கைவிட்டே மக்கள் வெளியேறினார்கள். இன்று அந்த உபகரணங்களை இரும்புகளாக கொழும்பிலிருந்து செல்லும் அரசியல்வாதிகள் கொள்வனவு செய்கின்றனர். பணம் சம்பாதிக்கின்றனர்.

ஏன் அம்மக்களுக்கு அதனை வழங்க முடியாது. யுத்தம் முடிந்த பின்பு இனங்களிடையே நல்லுறவை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக இனவாதத்திற்கு தூபமிடப்பட்டுள்ளது.

பிரதேச சபைகளுக்கு ஜனநாயக ரீதியில் தெரிவானவர்கள் மக்கள் சேவையை முன்னெடுக்கவிடாது தடுக்கப்படுகின்றனர். அனைத்திலும் இராணுவம் தலையிடுகிறது.

யுத்தம் நடைபெற்ற காலத்திலும் இல்லாதவிதத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், கடத்தல்கள், கொலைகள் அதிகரித்துள்ளன.

ஆனால் அரசாங்கம் இவை தொடர்பில் தமது பொறுப்புக் கூறும் தன்மையைக் கைவிட்டு மௌனம் காக்கின்றது. சட்டம் நீதி சிவில் நிர்வாகம் வடக்கில் இல்லை. எனவேதான் ஏகாதிபத்திய வாதிகளின் தலையீடு அதிகரித்துள்ளது.

தமிழ் மக்களின் பொறுப்புக் கூறும் தன்மையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு கிழக்கு தெற்கு அனைத்து பிரதேசங்களிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்துப் போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.

No comments:

Post a Comment