Translate

Monday, 9 April 2012

ஒக்ரோபரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம்!


இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா அமைப்பின் பங்கு குறித்து மீளாய்வு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதாக, ஜெனிவாவில் உள்ள  இலங்கை வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி வழியாக அளித்துள்ள செவ்வி ஒன்றில், நம்பகமான வட்டாரங்கள் மூலம் தமக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

பான் கீ மூனினால் நியமனம் செய்யப்பட்ட தருஸ்மன் தலைமையிலான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைக்கு அமையவே, இந்த மீளாய்வு பணியை  ஐ.நா மேற்கொள்கிறது.
இந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவரை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் ஏற்கனவே நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஆராயும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் தமரா குணநாயகம் கூறியுள்ளார்.
அத்துடன், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா அதிகாரிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்பாக இந்த அறிக்கையில் இலங்கை மீது குறை கூறப்படும் சாத்தியம் உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment