Translate

Monday 9 April 2012

குணரட்ணம் கொழும்பு வரவேயில்லை என்கிறார் கோத்தாபய!


கிரிபத்கொடவில் கடத்தப்பட்ட ஜேவிபி மாற்றுக் குழுவின் தலைவரான பிறேம்குமார் குணரட்ணத்தை, கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு அவுஸ்ரேலியா அழுத்தம் கொடுத்துள்ளது. அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்ற குணரட்ணம் காணாமற்போனது தொடர்பாக அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் முடி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.


ஆனால், பிறேம்குமார் குணரட்ணம் என்ற பெயருடைய ஒருவர் அவுஸ்ரேலிய கடவுச்சீட்டில் கொழும்பு வரவில்லை என்றும், அவர் கொழும்பு வந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

“அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பிறேம்குமார் குணரட்ணம் என்ற எந்தவொரு நபரும் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக சிறிலங்காவுக்குள் பிரவேசிக்கவில்லை. அவ்வாறு வந்ததற்கான எந்தப் பதிவுகளும் இல்லை. குணரட்ணம் நாடு திரும்பியதாக ஊடகங்களில் தகவல் வெளியானபோது, அதுபற்றிய விபரங்களைத் தந்து உதவுமாறு அவுஸ்ரேலியாவிடம், சிறிலங்கா அரசு கோரியிருந்தது.

ஆனால், அந்தக் கோரிக்கையை அவுஸ்ரேலியத் தூதரகம் புறக்கணித்து விட்டது“ என்றும், கொழும்புக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடியிடம் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். அதேவேளை, அவுஸ்ரேலிய தூதரகத்திடம் இருந்து குணரட்ணம் பற்றிய மேலதிக தகவல்கள், அவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சிறிலங்கா திரும்பியதற்கான ஆதாரங்கள், கடவுச்சீட்டு இலக்கம் என்பனவற்றுக்காக காத்திருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தமது நாட்டுக் குடியுரிமை பெற்ற குணரட்ணம் சிறிலங்காவில் காணாமற்போனது குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், “காணாமற்போனவரின் நிலை குறித்து சிறிலங்கா அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள மூத்த இராஜதந்திரி இதுதொடர்பாக சிறிலங்கா அரசின் உதவியை நாடியுள்ளார்“ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment