அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழரல்லாத காந்தியையும், பேடன் பவுலையும் எதிரிகளாகவும், தமிழர்களின் ஆதரவாளர்களாகவும் கருதி செய்யப்பட்ட பேரினவாதிகளின் செயற்பாடே இச்சிலை உடைப்பாகும். உடைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் உருவாக்குவதற்கு இலங்கையர்களிடமிருந்தும் சர்வதேச சமூகங்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்க வேண்டும்.மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, பேடன் பவுல், விபுலானந்த அடிகள், புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை ஆகியோரின் சிலைகள் உடைக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் இலங்கையின் கௌரவத்தைப் பாதிக்கும் செயலாகும் என இது குறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் நுவரெலியா மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பிறந்த இந்தியரான மகாத்மா காந்தியை உலகமே நேசிக்கின்றது. வெள்ளையரான பேடன் பவுலின் சாரணியம் சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்துகின்றது. இவர்கள் சிறந்த குணங்களைத் தன்னகத்தே கொண்ட உத்தமர்கள். சுவாமி விபுலானந்தரும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையும் நமது மண்ணின் மைந்தர்களாக சைவத்திற்கும் தமிழுக்கும் உயிர்மூச்சாய்த் திகழ்ந்தவர்கள்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட சிலை உடைப்பின் மூலம் இனவாதிகள் சாதிக்க நினைப்பது என்ன? விபுலானந்த அடிகளாரும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையும் தமிழ் வளர்த்தது குற்றமா? அல்லது தமிழனாகப் பிறந்து சமூக நலனுக்காக உழைத்தது தவறா?
மனிதநேயம் நற்பண்புகள் பழக்கவழக்கம் நெறிமுறை நீதிக்குத் தலைவணங்குவது, பிர சமூகங்களைப் புரிந்து கௌரவிப்பது, சமயங்களை மதிப்பது போன்ற அடிப்படை அறிவில்லாதவர்களின் செயலே இதுவாகும். படைகள் குவிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் சிலைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம்? தமிழ் சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகவேயுள்ளது என்பதற்கு இது சான்றாகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கும் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கும் இது ஓர் உதாரணமாகும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment