Translate

Sunday 22 April 2012

அரசின் விருந்துபசாரங்களுக்கு இந்திய எம்.பி.க்கள் விலைபோக மாட்டார்கள்:யோகராஜன் _


  அரசாங்கத்தின் பேச்சுக்களுக்கும் விருந்துபசாரங்களுக்கும் களியாட்ட கண்காட்சிகளுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு விழாக்களுக்கும் அழைத்து கௌரவிப்பதைப் பார்த்து இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற குழுவினர் மயங்கி விடமாட்டார்கள். தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் பங்களிப்பு இடம்பெறாத நிலையில் சுற்றுலா பயணிகளைப் போல் கருதிக்கொண்டு அரசாங்கம் அளிக்கும் இராப்போசன விருந்துபசாரங்களுக்கு விலை போகமாட்டார்கள். 


இலங்கையின் உண்மையான நம்பகத்தன்மையையும் இங்கு நிலவும் தமிழ் சமூத்தின் துயரங்களையும் வேதனைகளையும் இழப்புக்களையும் புறக்கணிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத்துறை இந்திய வம்சாவளி மக்களின் கடந்த இருநூறு ஆண்டு கால அவல வாழ்வியல் நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்கும் ஆர்வம் கொண்டுள்ள சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழுவை வரவேற்கின்றோம் இவ்வாறு நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினரை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் சந்த்த ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கி சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜனுடன் மேல் மாகாண சபை உறுப்பினர் சி.வை.பி. ராம் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாக செயலாளர் ஆர்.திவ்வியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே யோகராஜன் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பின் போது சர்வகட்சி மõநாட்டின் அறிக்கையையும் இந்திய வம்சாவளி மக்களது அடிப்படைப் பிரச்சினை தொடர்பாக இரண்டு மகஜர்களும் சுஸ்மா சுவராஜிடம் கையளிக்கப்பட்டன. பெருந்தோட்டத்துறை அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இச்சந்திப்பில் தமிழ் மக்களினதும் பெருந்தோட்டத்துறை சமூகத்தினரதும் பிரச்சினைகள் குறித்து பல விடயங்கள் முன் வைக்கப்பட்டன.

தமிழ் மக்களினது முகாம்களிலும் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களினதும் பிரச்சினைகளை தெளிவாக உணர்ந்துள்ள தூதுக்குழுவினரின் ஒருமித்த உடன்படான அபிப்பிராயத்தை தமிழ் மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கை வைத்துள்ளார்கள். முன்னர் இலங்கை வந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரின் செயற்பாட்டுக்கும் தற்போது வருகை தந்துள்ள இந்திய குழுவினருக்கும் வேறுபாடுகள் காணப்பட்டாலும் இந்திய மத்திய அரசாங்கமும் அவர்களது அறிக்கை தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்பதால் தமிழ் சமூகத்திடம் பாரிய நம்பிக்கை எழுந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போக்கும் செயற்பாடும் பூசி மெழுகியதாக இருப்பதை தூதுக்குழுவினர் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று தெரிவித்த யோகராஜன் மேலும் தெரிவித்ததாவது,

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம். எனினும் அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் சந்தேகிப்பது காலத்தை விரயமாக்கும் செயல் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். பெருந்தோட்டத்துறையினர் பிரச்சினைகளில் காணி, வீடு, தொழில், கல்வி என்பன பிரதானமாகும். 200 வருடங்களாக ஒதுக்கப்பட்டுள்ள சமூகமாக அடிப்படை உரிமைகள் தேவைகளின்றி அல்லற்படுகின்றார்கள். இவற்றில் நிலவும் பாகுபாடுகள் இட ஒதுக்கல் நிலைமை பற்றாக்குறை என்பன தொடர்பாக மகஜரில் குறிப்பிட்டுள்ளோம். ___

No comments:

Post a Comment