மியான்மாரின்(பர்மா) “ஞானத்தை’ முன்னுதாரணமாக பார்க்க வேண்டும்
தமிழ் மக்களின் துன்பங்களுக்கு தீர்வுகாண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடைப்பிடித்துவரும் கொள்கைகளையே மியான்மாரும் (பர்மா) கடைப்பிடித்து வந்தது.
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வுகாண ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டும் விசனமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடமிருந்து மட்டுமன்றி எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச சமூகத்தினர் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான இதய சுத்தியுடனான முன்னகர்வை அரசாங்க தரப்பிலிருந்து பார்க்க முடியவில்லை.
மாறாக தொடர்ந்தும் சந்தேகத்தையே ஏற்படுத்தும் சமிக்ஞைகளையே அரசதரப்பு வெளியிட்டுவருவதை அவதானிக்க முடிகிறது. யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாட்டை வலியுறுத்திய ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு மாற்றீடான உள்நாட்டுப் பொறிமுறையென அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை கட்டம் கட்டமாகவே அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதேவேளை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்திய வரலாறு உலகில் எங்கும் இல்லையென்ற கருத்தையும் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டிருக்கின்றமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமுல்படுத்துவது தொடர்பான சந்தேகத்துக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளும் தமிழ் மக்களின் அவசரத் தேவைகள் மற்றும் அடிப்படை அபிலாஷைகளின் பரிமாணத்தில் சிறியதொரு பகுதியையே பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் காணப்படுவதாக ஏற்கனவே தமிழ்க் கூட்டமைப்பு போன்ற தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியானது அதிருப்தி தெரிவித்திருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட்டதை இருமனதுடன் வரவேற்றிருந்த ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட மேற்குலகும் அந்த அறிக்கையின் பரிந்துரைகளை காலதாமத மின்றி உடனடியாக அமுல்படுத்துமாறு வலியுறுத்திவருவதுடன் மட்டுமன்றி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தீர்வொன்றை நிறைவேற்றியுள்ளன.
ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தில் இரு வேறு நிலைப்பாடு இருப்பதை அமைச்சர்கள் மட்டத்திலிருந்து தொடர்ந்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
அத்துடன் அரசினால் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மக்கள் ஆணையைப் பெற்றவையல்லவெனவும் அவை தெரிவிக்கும் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்ற கடப்பாடு இல்லையென்றும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டிருந்த தொனியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கான “எதிர்காலத்தை’ கட்டியம் கூறுபவையாக இருக்கின்றன.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் துன்பங்களுக்கு தீர்வைக் காணுமாறு இந்தியா உட்பட உலகம் வலியுறுத்திவரும் நிலையில் இதற்கு மாறான தன்மைகளையே வடக்கு, கிழக்கில் காண முடிவதாகவும் ஆறு தசாப்தங்களாக ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறையையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருவதாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பதுடன் இதேபோக்கைத் தொடர்ந்தால் இலங்கை மீது சர்வதேசத்தின் விசனம் அதிகரிக்கும் நிலைமை ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
தமிழ் மக்களின் துன்பங்களுக்கு தீர்வுகாண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடைப்பிடித்துவரும் கொள்கைகளையே மியான்மாரும் (பர்மா) கடைப்பிடித்து வந்தது.
ஆனால், சர்வதேசத்தின் நெருக்குவாரங்களினாலும் பூகோள அரசியல் சமன்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் தற்போது பாரியமாற்றம் ஏற்பட்டுவருகிறது. அந்நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுவதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனுபவத்தின் மூலம் மியன்மார் இப்போது பெற்றுள்ள “ஞானத்தை’ அரசாங்கம் முன்னெச்சரிக்கையுணர்வுடன் கூடியமுன்னுதாரணமாகப் பார்க்க முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திலுள்ள பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தத்தமது வாக்கு வங்கியைத் தக்கவைக்கும் நோக்கத்தைக் கொண்டவையென்பது புதியவிடயமல்ல.
ஆனால், தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் நியாயபூர்மான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக”அரசியல் ஆதாயம்’ தேட முனைவதும் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதும் ஜனநாயக தார்மீக கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானவை என்பதுடன் நியாயமாக சிந்திப்போரின் பார்வையில் அருவருக்கத்தக்க விடயமுமாகும்.
No comments:
Post a Comment