உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை தமது இலங்கை விஜயத்தின் நோக்கம் நிறைவேறாது என இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த பன்னிருவர் அடங்கிய இந்திய நாடாளுமன்றக் குழுவினர் அதனை நிறைவுசெய்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவர் அஷோக் கே காந்தாவும் கலந்துகொண்டிருந்தார்.
அங்கு உரையாற்றிய சுஷ்மா சுவராஜ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நானும் எனது குழுவினரும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான கட்சிகளின் தலைவர்கள், ஏனைய கட்சி உறுப்பினர்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம். அத்துடன் இலங்கையின் வடக்கு ,கிழக்கு உள்ளிட்ட ஏனைய சில பகுதிகளுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டோம்.
‘மீள்குடியேற்றம்”
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட சிறு தொகையினர் இன்னும் மீள்குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் வரை எமது விஜயத்தின் நோக்கம் நிறைவேறாது.
அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு தேவையான வழிவகைகளை இருநாட்டு ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்”
எமது இந்த விஜயத்தின்போது கடந்த நான்கு நாட்களாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டோம். குறிப்பாக காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பிலும் உயர் பாதுகாப்பு வலயங்களை குறைப்பது பற்றியும் இராணுவ வசப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகளை மீளளிப்பது குறித்தும் வடக்கில் பொதுமக்கள் தொடர்பான விடயங்களில் இராணுவ தலையீடுகள் குறைக்கப்பட வேண்டியது பற்றியும் பேசினோம்.
அதற்கும் மேலதிகமாக இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வினை முன்வைக்கும் நோக்கில், மக்கள் சம உரிமை, நீதி, சுய உரிமையோடு வாழ்வதற்காக 13 பிளஸ் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.
‘மீனவர் பிரச்சினை”
இருநாட்டு மீனவர்கள் விடயத்தில் கவனமாகச் செயற்படுதல் அவசியமாகும். இருதரப்பினரும் இணைந்து நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவன் மூலம் தீர்விண்னி பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்.
இலங்கையில் அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர் அளித்த உறுதி மொழி என்ன?
பதின்மூன்றாவது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி எம்முடன் கலந்துரையாடல் நடத்தினார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாக தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். தீர்வுக்கான கால அவகாசம் உறுதியளிக்காவிடினும் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக நம்புகிறோம்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படப்போவதில்லை என்றும் இது ஏமாற்று நடவடிக்கை என்றும் இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சிலர் கூறுவது பற்றி..?
13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்னோடு பேசினார். ஏன், இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கூட அதைப்பற்றித்தான் பேசினோம். மற்றவர்களுடைய கருத்துப் பற்றி எனக்குத் தெரியாது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்திய தூதுக்குழுவுக்கு விருந்துபசாரம் வழங்கியதாகவும் அதில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறதே?
அதில் உண்மையில்லை. அவர் எங்களுக்கு விருந்துபசாரம் வழங்கவில்லை. மஹாபோதி சங்கத்தினர் வழங்கிய விருந்துபசாரத்தில் அவர் கலந்துகொண்டிருந்தார். அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
No comments:
Post a Comment