Translate

Sunday, 22 April 2012

சுஷ்மா குழுவும் வேஸ்ட் – பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்க்கவே இல்லை!!


இலங்கை தமிழர் நிலை அறியவும், அங்கு தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடவும் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற குழு துயரத்தில் தவிக்கும் தமிழரைப் பார்க்காமலேயே திரும்புகிறது.
பாதிக்கப்பட்ட தமிழர்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் பார்க்க ராணுவம் அனுமதிக்காததால், அவர்கள் காட்டிய காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு திரும்புகின்றனர் இந்திய எம்பிக்கள்.

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்யவே இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது.
இந்திய எம்.பி.க்கள் குழு தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு எதையும் செய்து விடக்கூடாது என்பதில் சிங்கள ராணுவம் தீவிரமாக இருந்தது. தமிழர்கள் மறு குடியேற்றம் செய்த பகுதிகள் மற்றும் தமிழர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்திய எம்.பி.க்கள் குழுவை சிங்கள ராணுவம் அழைத்துச் சென்றது.
அங்குள்ள தமிழர்களிடம் இந்திய எம்.பி.க்கள் பேசியபோது கூட சிங்கள ராணுவத்தினர் கண்காணித்தப்படி இருந்தனர். சில இடங்களில் ஈழத் தமிழர்களை எம்.பி.க்கள் குழுவினர் சந்திக்க முடியாதபடி சிங்கள ராணுவத்தினர் கெடுபிடி செய்து தடுத்து விட்டதும் நடந்துள்ளது.
சம்பூர் முகாமுக்கு செல்ல அனுமதி மறுப்பு
திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் தமிழர்களின் மிகப்பெரிய முகாம் உள்ளது. அங்கு இந்திய எம்.பி.க்கள் குழு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திரிகோணமலை மாவட்ட தமிழர்கள் உண்மையில் என்ன நிலையில் உள்ளனர் என்பதே திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் 1260 தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தன. அவர்கள் அனைவரும் துரத்தப்பட்டு அங்கு பெரிய ராணுவ முகாமை எழுப்பியுள்ளனர். இந்தியா உதவியுடன் அங்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக விரட்டப்பட்ட சம்பூர் தமிழர்கள் நிலை என்ன ஆயிற்று என்பதை எம்.பி.க்கள் குழு பார்வையிடவில்லை. சம்பூரில் அடுத்தக்கட்டமாக மிகப்பெரிய பொருளாதார மண்டலம் உருவாக்க இலங்கை அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் தங்களது விளை நிலங்கள் என்னாகுமோ என்று சம்பூர் பகுதி மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்திய எம்.பி.க்கள் அவர்களை பற்றி ஒருவார்த்தை கூட விசாரிக்கவில்லையாம். சிங்கள ராணுவமும் சம்பூர் முகாமை மறைத்துவிட்டு, எம்.பி.க்கள் குழுவை மட்டகளப்பு மாவட்டத்துக்கு அழைத்து சென்றுவிட்டது. அங்கும் ஈழத் தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்து பேச முடியவில்லை. வெறுமனே வளர்ச்சி திட்டங்களை மட்டுமே இந்திய எம்.பி.க்கள் குழு பார்வையிட்டது. அதை பார்த்து விட்டுத்தான் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் சிங்கள அரசை பாராட்டியுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஆஹா, ஓஹா அருமை எனப் பாராட்டியுள்ளார். அதேபோல இந்திய அரசு போட்டு வரும் ரயில்வே லைன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஏதோ அரசு தூதரைப் போல பேசிவிட்டு வந்திருக்கிறார்.
உண்மையிலேயே பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர் பார்த்திருந்தால் இப்படி சொல்லி இருக்கமாட்டார். எனவே எம்.பி.க்கள் குழு பயணம் வீணாகி விட்டதாக ஈழத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment