Translate

Saturday, 7 April 2012

சுதந்திரமான விசாரணைப் பொறிமுறையை உடனடியாக உருவாக்குக : இலங்கையிடம் அமெ. வலியுறுத்து!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலைமையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா, செனட் சபையிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் இந்த அறிக்கை கடந்த புதன் கிழமை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘இலங்கை அரசினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்துலக அமைப்புகளின் விசாரணை மற்றும் அனைத்துலக மனிதாபிமான மனித உரிமைச் சட்டங்களை மீறியோரைப் பொறுப்புக்கூற வைத்தல்’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும்,

“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ந்து ஊக்குவிப்பை வழங்கும்.

மேலதிகமாக பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டது, போர் தவிர்ப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், சரணடைந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டது, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், மனிதாபிமான உதவி வழங்கள், கட்டாயமாக காணாமற்போன சம்பவங்கள், கைது மற்றும் தடுத்து வைத்தல் கொள்ளைகள் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழு பதிலலிக்கத் தவறிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவும் என்று இராஜாங்கத் திணைக்களம் நம்புகிறது.

ஒவ்வொரு விசாரணைகளும் சுதந்திரமானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கும் விதத்திலும் இடம் பெற வேண்டும். இலங்கையின் நீண்டகால நண்பனான அமெரிக்கா நல்லிணக்க முயற்சிகளுக்கான ஆதரவாக இருக்கும்.

மோதலின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்களும் நல்லிணக்கத்துக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில் அது ஆண்டுக்கணக்கான ஆயுத மோதலின் அழிவுத்தடங்களில் இருந்து வெற்றி பெறவும் சமூகங்களின் பொதுவான கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது.

எந்தவொரு நம்பகமான பொறுப்புக்கூறும் நடவடிக்கையும் இருதரப்புகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

இலங்கையின் அமைதியான எதிர்காலம் எல்லாப் பின்னணியிலும் உள்ள இலங்கையர்களின் நம்பிக்கையில் இலங்கையர்களுக்கிடையிலும் அவர்களின் அரசுக்கு இடையிலுமான நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது.

உண்மையை ஒப்புக்கொள்வது கடந்த காலத் தவறுகளைக் கையாள்வதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பொறுப்பான வெளிப்படையான மற்றும் முறைப்படியான நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதிலேயே அந்த நம்பிக்கை தங்கியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment