Translate

Tuesday, 3 April 2012

சீமான்- நாஞ்சில் சம்பத் கருத்து மோதல்?


சீமான்- நாஞ்சில் சம்பத் கருத்து மோதல்?
சென்றவார “தமிழக அரசியல்” இதழில் அய்யா நாஞ்சில் சம்பத் அவர்கள் அளித்த பேட்டியில் திராவிடத்தை பழித்து பேசி சீமான் பிழைப்பு நடத்துகிறார், அவர் என்னோடு பொது மேடையில் திராவிடத்தை பற்றி விவாதிக்க தயாரா என்று சவால் விட்டிருந்தார்.

அதற்கு இந்த வார இதழில் சீமான் அளித்த பதில் இது..

திராவிடம் என்பது என்ன? திராவிடர்கள் என்பவர்கள் யார்? திராவிடம் தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு செய்தது என்ன என்பது பற்றியெல்லாம் கடந்த கால வரலாற்றிலிருந்து நன்கு கற்றுகொண்டபின்புதான் நானும் எனது தம்பிகளும் திராவிடம் வேண்டாம் தமிழனாய் ஒன்றுபடுங்கள் என்று முழங்கிவருகிறோம்.

ஆனால் அய்யா நாஞ்சில் சம்பத் அவர்கள், திராவிட எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து பிழைப்பு நடத்தவேண்டும் என்று நான் நினைப்பதாக கூறுகிறார். திராவிடத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியது யார், நடத்தி கொண்டிருப்பது யார்?

தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதோர் வாழ்வதற்கும், ஆள்வதற்கும், அரசியல் செய்வதற்கும் அதன் மூலம் சுரண்டி அனுபவிக்கவும் செய்த தந்திரம்தான் திராவிடம். தெலுங்கு, மலையாளம், கர்நாடகம், தமிழ் ஆகியவை சேர்ந்துதான் திராவிடம் என்றால், இன்று ஆந்திராவில் தெலுங்குவாதமும், கேரளாவில் மலையாளவாதமும், கர்நாடகாவில் கன்னடவாதமும்தான் பேசபடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்வாதம் பேசாமல் ஏன் திராவிடம் பேசுகிறீர்கள்?

இதிலிருந்தே தெரியவில்லையா? தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டை சுரண்டி தின்னுவதற்கு செய்துகொண்டிருக்கும் தந்திரம்தான் திராவிடம். ஆரியத்தை எதிர்பதுதான் திராவிடத்தின் முழுப்பணி என்றால் தமிழகத்தில் திராவிட கட்சியொன்றில் ஆரியதலைமை வந்தது எப்படி?
மாநில சுயாட்சியை எதிர்க்கும் தேசிய கட்சிகளை தமிழகத்தில் அழிப்பதற்காகவே அன்று அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் கண்டார். ஆனால் இன்று அதே திராவிட கட்சிகள் மாநில சுயாட்சியை மறுக்கும் தேசிய கட்சிகளிடம் சரணடைந்து பதிவிக்காக மண்டியிட்டு கிடகின்றனவே!
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?

சுமார் நாற்பது வருடங்களாக தமிழின் பெயரை கூறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளால் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க முடிந்ததா? ஏன், தமிழை தமிழ்நாட்டில் அனைத்து மட்டங்களிலும் அலுவலக, ஆட்சி மொழியாக்க முடிந்ததா? வழக்காடு மொழி, வழிபாட்டுக்கு மொழியாகவாவது மாற்ற முடிந்ததா? தமிழ்நாட்டில் இன்று பல பள்ளிகளில் பாடமொழியாக கூட தமிழ் இல்லையே? இதுதான் திராவிடக் கட்சிகள், ஆட்சிகள் தமிழ் வளர்த்த லட்சணமா?

தமிழக மீனவர்களின் பூகோள பாதுகாப்பு தகவமைப்பாக திகழ்ந்த கச்சதீவு இனபயங்கரவாத இலங்கைக்கு தாரைவார்கபட்டது திராவிட ஆட்சியில்தானே?

இன்றுவரை சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட என் மீனவ சகோதர்கள் இந்திய தேசிய கொடியை படகில் கட்டிக்கொண்டு போகும்போது சிங்கள கடற்படையால் காட்டுமிராண்டிதனமாக சுட்டு கொல்லபட்டார்களே, தங்களது கடல்தாய் முன்னரே நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டார்களே.. இன்று வரை தமிழ் மீனவ ரத்தம் கடலில் கலந்துகொண்டே இருக்கிறதே, இதெல்லாம் திராவிட ஆட்சியிலா? தமிழர் ஆட்சியிலா?

தமிழ்நாடெங்கும் உள்ள ஆறுகளை துகிலுரித்து தோண்டி தோண்டி பல்லாயிரம் டன் மணல் அள்ளி பக்கத்துக்கு மாநிலங்களுக்கு விற்று… தமிழ் மண்ணை மலட்டு மண்ணாக மாற்றி கொண்டிருக்கும் மணற்கொள்ளை நடந்ததே, நடந்துகொண்டிருக்கிறதே… இதெல்லாம் திராவிடர் ஆட்சியிலா? அல்லது தமிழர் ஆட்சியிலா?

இதையெல்லாம் விட உச்சமாக… ஈழத்தில் எம் சொந்தங்கள் லட்சக்கணக்கில் குண்டுபோட்டு கூட்டம் கூட்டமாய், கொத்து கொத்தாய், பெரியவர்கள்- சிறுவர்கள் என்று பார்க்காமல் தமிழ் இனத்தையே யுத்தம் எனும் பெயரில் ஒட்டுமொத்தமாய் கொன்றுகுவித்தார்களே, அப்போது இந்த போரை நடத்திய இந்திய-மத்திய காங்கிரஸ் அரசுக்கு தோளோடு தோள் கொடுத்து கொண்டிருந்தது தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாற்பது திராவிட கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானே…?

என் மொழியை, என் இனத்தை, என் இனத்தின் உரிமையை, உடைமையை என தமிழர்கள் எல்லாவற்றையும் இழப்பதற்கு காரணம் திராவிடம்.

அதனால்தான், ‘ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் ?’ என்று கேட்ட காலம் போய், ‘ஏன் வேண்டும் துன்ப திராவிடம்?’ என்ற கேள்வியை இன்று தமிழ் இளையோர்கள் எழுப்பிகொண்டிருகிறோம். இவையெல்லாம் அய்யா நாஞ்சில் சம்பத் தெரியாதவரா ? அறியாதவரா? அண்மையில் சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் நடந்த கூடன்கூளம் அணுவுலை எதிர்ப்பு பொதுகூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் அவர்கள், ‘இனி தமிழர்களுக்கு சர்வதேசியமோ, இந்திய தேசியமோ தேவையில்லை. நமக்கு தேவை தமிழ் தேசியமே’ என்று பேசினார். இப்படி அவர் பேசியதின் அர்த்தம் என்ன?

திராவிடம் தமிழுக்கு இழைத்த தீமைகள், இழைக்காத நன்மைகள் பற்றியெல்லாம் மணிக்கணக்கில் என்ன நாள்கணக்கில் விவாதிக்க நாங்கள் தயார். என் தம்பிகள் நாஞ்சில் சம்பத் அய்யாவோடு விவாதிப்பார்கள். நானும் வருகிறேன். ஆனால், உங்கள் தலைவர் அண்ணன் வைகோவை வரசொல்லுங்கள். எந்த நாள், எந்த நேரம், எந்த நொடி என்று சொல்லுங்கள். திராவிடம் பற்றிய விவாதத்துக்கு சீமான் தயாராக இருக்கிறான்.

மேடையை நாஞ்சில் சம்பத் அமைகிறாரா… அல்லது நாங்களே அமைகட்டுமா?” என்று ரௌத்திரத் தமிழில் கேள்வியோடு முடித்தார் சீமான்.

நன்றி: நாம் தமிழர் கட்சி

No comments:

Post a Comment