செயலில் முன்னேற்றம் இல்லாமல் வாய்ச்சவடால் தீர்வாகாது இந்தியா

விரிசலைச் சீர் செய்யும் நோக்கில் அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான பஸில் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு புதுடில்லியிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண காத்திரமான நகர்வு ஒன்றை இலங்கை அரசு மேற்கொள்ளும் வரை இலங்கையின் எந்த இராஜதந்திர முயற்சிகளையும் வரவேற்பதில்லை என்று புதுடில்லி கொள்கையளவில் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்திய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இதனடிப்படையில் பஸில் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் வருகையையும் உடனடியாக ஊக்குவிப்பதில்லை என்ற முடிவுக்கு இந்திய மத்திய அரசு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த மாத முற்பகுதியில் இந்தியா செல்ல பஸில் தலைமையிலான அமைச்சர்கள் குழு திட்டமிட்டிருந்தது. இப்போது அது சாத்திய மாகாது என்று தெரிகிறது.இலங்கை அரசு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதில் பயனேதும் இல்லை என்று புதுடில்லி கருதுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணக் காத்திரமான நகர்வுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும். அதற்காகவே புதுடில்லி காத்திருக்கிறது. இலங்கையின் நகர்வுகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” என்றார் அவர்.
போர்க்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீராகப் பேணுவதற்காக இரு நாடுகளிலும் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கைத் தரப்பில் பஸில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்தியத் தரப்பில் வெளியுறவுத்துறைச் செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
போர் முடிந்த பின்னரும் இந்தக் குழுவினருக்கு இடையே நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டு வந்தன. ஆனால் ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் இந்தக் குழுக்கள் செயலிழந்த நிலைக்குச் சென்றுள்ளன
No comments:
Post a Comment