வடக்கில் இராணுவத்தின் இருப்பை மேலும் வலுயுறுத்தியுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கு தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெஸ்பி, வடக்கின் மக்கள் நிலைமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார். அதன் பின்னர் அவர் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்திருந்தார்.
அவரின் அக் கருத்து தமிழ் மக்களிடையே விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே வடக்கு கிழக்கில் இராணுவத் தலையீடுகளினால் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் மக்கள், தமது பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் நெஸ்பி, வடக்கில் தமிழ் மக்களின் நிலைகளை பிரிட்டன் அரசுக்கு எடுத்துக் கூறுவதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது மக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது நெஸ்பி,
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை. மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்குவதனை தடுத்து நிறுத்த படையினரின் பிரசன்னம் அவசியமானது எனவும் வட அயர்லாந்தில் கிளர்ச்சிக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் நீண்ட காலத்திற்கு பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், வடக்கு கிழக்கில் நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீடு தெளிவான விளக்கங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment