Translate

Sunday 22 April 2012

ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்? – கலக்கத்தில் சிறிலங்கா


நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார்.


நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார்.

ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர்.

எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் நிலையில், போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பணியாற்றுகின்ற நிலையில், எரிக் சொல்ஹெய்ம் அவருக்குத் தலைவலி கொடுக்கலாம் என்று சிறிலங்கா கலக்கமடைந்துள்ளது.

ஐ.நாவுக்கான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டால், அது சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசதரப்பு எதிர்பார்க்கிறது.

சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுநோர்வே பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகிறது.

சில காலங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் கூட இதையே வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான ஒருவர் ஐ.நாவில் உயர் பதவியைப் பெறுவது தமக்கு நெருக்கடியாக அமையும் என்று, சிறிலங்கா அரசதரப்பு கலக்கமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment