ஐ.நா. படை இதை அரங்கேற்றும்; எதிரணிக் கட்சிகள் எச்சரிக்கைஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும். ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நவசிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா இது தொடர்பாகத் தெரிவித்ததாவது
ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்கக் கோரியும் நாம் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம்.
கொழும்பில் மாத்திரம் குவிந்து கிடக்கும் அதிகாரம், மாவட்ட மட்டத்தில் பகிரப்படவேண்டும். வடக்கு, கிழக்கிற்குத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
ஜெனிவாத் தீர்மானத்திற்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்த முடியாவிட்டால், அரசு அந்தப்பணியை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
அரசியல் தீர்வை வழங்கினால் விமல் வீரவன்ஸ மற்றும் குணதாஸ அமரசேகர ஆகியோர் தன்னை ஆட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று ஜனாதிபதி அஞ்சுகிறார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெனிவாவில் அடித்துக்கூறிவிட்டு மீண்டும் சர்வதேசத்தையும், நாட்டு மக்களையும் ஜனாதிபதி ஏமாற்றிக்கொண்டிக்கின்றார் என்றார்.
ருஹுணு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அருண சொய்சா கூறியவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாட்டைப் பார்க்கும்போது இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இந்த நாடு இரண்டாகப் பிரியும் அபாயம் உள்ளது. அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை அப்படியே கிடப்பில் போடும் செயலில்தான் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.
ஜெனிவாத் தீர்மானத்தை தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் சர்வதேசம் எமது நாட்டுக்குள் ஐ.நா. அமைதிப்படையை அனுப்பி வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாஷைகளை அறிவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம். அப்போது அந்த மக்கள் வடக்கு, கிழக்கைப் பிரித்துத் தருமாறு கூறுவர். இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் அரசு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment