Translate

Friday 13 April 2012

”பிரபாகரனுக்குப் பின்னால் உள்ள படத்தைப் பாருங்கள்..! வைகோ சொன்னவுடன் தமிழீழ வரைபடத்தை உற்றுக் கவனித்த நீதிபதிகள்!


விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறி​விட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா… தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ.

கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார்.
‘நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்​கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. கடைசியாக 14.2.2010 அன்று மத்திய அரசு தடை விதித்தது.
புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா என்று விசாரணை நடத்து​வதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
இதில் வைகோ, நெடுமாறன், வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள். புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை சரியானதுதான் என்று நீதிபதி விக்ரம்ஜித் சென், கடந்த 12.11.2010 அன்று தீர்ப்பு அளித்தார்.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இதேபோன்று ஒரு மனுவை வழக்கறிஞர் புகழேந்தியும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச் முன்பாக 9-ம் தேதி வந்தபோதுதான், வைகோவின் குரல் எதிரொலித்தது.
”விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்று வாதம் வைப்பதற்கு வைகோவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் பதில் கூறப்பட்டு உள்ளது. நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல என்றும் மத்திய அரசு கூறுகிறது.
புலிகள் அமைப்பை ஏன் தடை செய்திருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் காட்டும்போது என்னுடைய பேச்சுக்களை, அதற்காகப் போடப்பட்ட வழக்குகளை, என்னுடைய கட்சியைக் குறிப்பிட்டு உள்ளார்கள்.
எனவே இந்தத் தடை தவறானது என்று வாதிடுவதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது” என்று தன்னுடைய வாதங்களை முன்வைக்கத் தொடங்கினார் வைகோ.
”தமிழ்நாட்டையும் சேர்த்து சுதந்திரத் தமிழீழம் அமைக்க புலிகள் இயக்கம் முயற்சிக்கிறது. எனவேதான், இந்தியாவில் புலிகளைத் தடை செய்திருக்கிறோம்” என்று மத்திய அரசு குறிப்பிட்ட வாதத்தை வைகோ கடுமையாக மறுத்தார்.
”விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிலோ, இந்தியா​விலோ ஓர் அங்குல நிலத்தைக்கூட இணைக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் மட்டுமே தமிழீழம் என்கிறார்கள்.
பெரும்பான்மைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் அவை. இலங்கையின் மற்ற பகுதிகளைக்கூட அவர்கள் கைப்பற்ற நினைக்கவில்லை.
அப்படி இருக்கும்போது இந்தியப் பகுதியை எப்படிக் கைப்பற்ற நினைப்பார்கள்? மத்திய அரசு இப்படிச் சொல்வது கற்பனையான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. உண்மையில் இந்தியப் பகுதியையும் சேர்த்துத்தான் தமிழீழம் உருவாக்க பிரபாகரன் நினைத்தார் என்பதை மத்திய அரசு நிரூபிக்குமானால், இந்த இடத்தில், இப்போதே என்னுடைய வாதங்களை நிறுத்திவிடத் தயாராக இருக்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட வைகோ, நீதிபதியைப் பார்த்து…
”நான் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பிரபாகரனின் படத்தை இணைத்துள்ளேன். அவருக்குப் பின்னால் தமிழீழ நாட்டின் வரைபடம் இருக்கிறது. அதைப் பாருங்கள். அதில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்தான் இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியும் இல்லை என்பதை நீங்களே உணரலாம்” என்று சொல்ல… அதை உற்றுக் கவனித்தார்கள் நீதிபதிகள்.
”புலிகளை ஆதரித்துப் பேசும் எங்​களால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்​பாட்டுக்கும் ஆபத்து என்று தடைக்கான காரணமாக மத்திய அரசு கூறுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதில் தவறு இல்லை என்று 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்​பட்டுள்ளது.
கொளத்தூர் மணி மீதான வழக்கில் நீங்களே அப்படி ஒரு தீர்ப்பினைத் தந்துள்ளீர்கள். எனவே, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது, சட்டப்படி தவறு அல்ல.
புலிகள் அமைப்பினால் வி.வி.ஐ.பி-களின் உயிருக்கு ஆபத்து என்று, 2007-2008 ஆண்டுகளில் இலங்கையில் நடந்த சம்பவங்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இலங்கையில் வாழ்ந்த ஈழத் தமிழினத்தை வேரோடு கருவறுக்க சிங்கள இராணுவம் முயற்சித்த காலகட்டம் அது.
அந்த நேரங்களில் என்ன நடந்தது என்பதை ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு வெளியிட்ட அறிக்கையை முழுமையாகப் படித்தால், ரத்தக் கண்ணீர் வரும். இதற்கு சாட்சியாக சேனல் 4 தொலைக்காட்சி இருக்கிறது” என்று சொல்லி ஒவ்வொரு காட்சியாக விவரித்தார் வைகோ.
”இப்படி ஒரு சூழ்நிலையில் தடை வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரே ஒரு காரணம்தான். இலங்கையில் வாழ முடியாத நிலையில் ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் நாதியற்று அலைகிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டுக்குத்தான் அவர்களால் வர முடியவில்லை. தடையை நீக்கினால் இங்கு வந்து வாழவும் படிக்கவும் எதிர்காலத்திலாவது அவர்களால் முடியும். அதற்காகத்தான் தடையை நீக்கக் கேட்கிறோம்” என்று முடித்தார்.
அடுத்து புகழேந்தி சார்பில் வழக்கறிஞர் ராதா​கிருஷ்ணன் வாதாடினார். அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி, ”எந்த இயக்கம் தடை செய்யப்பட்டதோ, அந்த இயக்கத்தின் உறுப்பினரோ அல்லது நிர்வாகியோதான் எதிர்த்து வழக்குப் போட முடியும்.
வைகோ, புலிகள் அமைப்பின் உறுப்பினரும் அல்ல… நிர்வாகியும் அல்ல. மேலும் தேசியத் தீர்ப்பு ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்குப் போட முடியுமே தவிர, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியாது” என்றும் சொன்னார்.
ஒன்பதாம் தேதி இவ்வாறு முடிந்த விவாதம் 11-ம் தேதியும் தொடர்ந்தது…
மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் அன்றும் வாதாடினார். ”விடுதலைப்புலிகள் அமைக்க விரும்பிய தமிழீழம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
புலிகளின் ஆதரவாளர்கள், தமிழகத்தில் இருந்த சில ஏஜென்டுகள் அவர்களுக்காகக் கடத்தலில் ஈடுபட்டனர். கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள், அம்மோனியம் நைட்ரேட், பெற்றோல், டீசல், வாகன உதிரிப் பாகங்களைக் கடத்தும் வேலையில் ஈடுபட்ட அவர்கள் மீது சென்னை, மதுரை, இராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் கியூ பிரிவு மற்றும் உள்ளூர் பொலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததை மத்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பு இந்தியாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற அமைப்பு. இது போன்ற காரணங்களால் இந்தியாவின் பாதுகாப்பையும் அருகில் உள்ள நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே புலிகள் அமைப்புக்கு தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது” என்று வாதாடினார்.
தடையை நீக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அவர் சார்பாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடி​னார். ”ஒரு இயக்கத்தை சட்டப்படி தடை செய்ய வேண்டுமானால், அப்போது அந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கூற்றுப்படி 2009-லேயே விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது. அப்படியானால் செயல்படாத இயக்கத்துக்கு எப்படி தடை விதிக்க முடியும்? எனவே தீர்ப்பாயத்தின் இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதாடினார். தனது தரப்பு வாதங்களை வைகோ மீண்டும் வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”2009க்குப் பிறகு விடுதலைப்புலிகள் இந்தியாவின் அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை​களில் ஈடுபடவில்லை என்றாலும், அதுபோல் எதிர்காலத்தில் நடந்துவிடக்கூடாது என்பதைக்கருத்தில் கொண்டுதான் இந்தத் தடையை விதித்துள்ளது. இந்த வழக்கில் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை பரிசீலனை செய்தே தீர்ப்பு வழங்க முடியும். ஏனென்றால் வருமுன் காப்பது தான் சிறந்தது” என்று கூறி இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
புலிகள் விவகாரம் எப்போதுமே சர்ச்சையாகத் தொடர்ந்து கொண்டு உள்ளது!
ஜூனியர் விகடன்!

No comments:

Post a Comment