சுஷ்மா என்ன எந்த குஷ்புவை இந்தியா அனுப்பினாலும் பிரச்சினை தீரப்போவதில்லை- அரியநேத்திரன்!
சுஷ்மா தலைமையில் அல்ல குஷ்பு தலைமயில் குழு வந்தாலும் எந்த தீர்வும் வந்து விடப்போவதில்லை. சுஷ்மா குழுவின் விஜயம் பற்றி ஈழத்தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதே இங்குள்ள யதார்த்தம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இலங்கை வந்த சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற குழுவால் மட்டக்களப்பில் தாக்குதலுக்கு உள்ளாகிய இந்தியாவின் தேசபிதாவான மகாத்மா காந்தியைக் கூட சந்திக்க முடியவில்லை என்றால் தமிழர்களின் உண்மை நிலையை அறிந்து எவ்வாறு தீர்வை பெற்றுத்தர முடியும்?; என அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார்.
உண்மையில் இந்தியக் குழு கிழக்கு மாகாண விஜயத்தின் போது சம்பூர் அகதிகள் உட்பட கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மக்களையும், அண்மையில் தலை துண்டிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட மகாத்மாகாந்தி சிலையையும் பார்வையிடுவார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நடந்தது என்னவென்றால் இந்தியக் குழுவால் இலங்கையின் நிகழ்ச்சி நிரலை மீறி செயற்பட முடியாமல் போயுள்ளது.
தமிழர்களின் உண்மை நிலையை அறிந்து கொண்டு செல்வதற்கே இந்தியக் குழு இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை வந்த சுஷ்மா குழு வடகிழக்கிற்கான தங்களது பயணங்களை மின்னல் வேகத்தில் நிறைவு செய்ததுடன் இலங்கை அரசாங்கத்தினுடனான உறவினைப் பலப்படுத்தும் நிகழ்சிகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தது.
இந்திய பௌத்த உறவை பாராட்டிய சுஷ்மா சுவராஜ் ஜெனிவாத் தீர்மானத்தின் மூலம் இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகங்களையே எங்களுக்கு தோற்றுவித்துள்ளது.
எங்களை பொறுத்தமட்டில் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற குழுவின் விஜயம் இந்தியாவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்த இலங்கை அரசை திருப்திப்படுத்துவதற்கான நல்லுறவு விஜயமாகும். இந்த விஜயத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடப்போவதில்லை தமிழர்களை பொறுத்தமட்டில் சுஷ்மா தலைமையில் அல்ல குஷ்பு தலைமயில் குழு வந்தாலும் எந்த தீர்வும் வந்துவிடப்போவதில்லை என்பதே இங்குள்ள யதார்த்தம் என அரியநேத்திரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment