
இவர்களைப் பொறுத்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை வரலாறு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளதென்ற கருத்தியலைக் கொண்டவர்களாக உள்ளனர். இந்த கருத்தியலில் இலங்கையின் இன விவகாரம் குறித்துக் கூட தென்னிலங்கையின் நிலைப்பாட்டில் சடுதியான ஒரு மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தவுடன் மேற்கூறிய மனப்போக்கு தென்னிலங்கையின் அனைத்து மட்டங்களிலும் மிக ஆழமாக எதிரொலித்தது.
இந்த சக்திகளைப் பொறுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களுடைய இருப்பு, சுய கௌரவம், சுய நிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு என அனைத்துமே முள்ளிவாய்க்கால் போருடன் புதைக்கப்பட்டு விட்டன என்பதையே தமது நிலைப்பாடாக கொண்டிருக்கின்றனர்.
இதனை முன்னிறுத்தியே 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியதாகக் கருதுகின்றனர். அதாவது மகாவம்சத்தின் போக்கில் இலங்கையின் எதிர்கால வரலாற்றை புதிய வடிவில் எழுத, செயற்படுத்த முற்படுகின்றனர். இதன் ஒரு அங்கமே தென்னிலங்கை பேசுகின்ற ““நல்லிணக்கம்.'' மேலோட்டமாக பார்க்கும் பொழுது தென்னிலங்கை மொழியில் பேசப்படுகின்ற ““நல்லிணக்கம்'' என்பது கவர்ச்சியான சொற்பதமாகவே தென்படுகின்றது. ஆனால் நல்லிணக்க சொற்பதத்திற்குள் புதைந்து கிடக்கும் “மூளைச் சலவை'' பற்றிய பாரதூரத்தை எவரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
அரசியலில், கல்வியில், வர்த்தகத்தில், சமூகத்தில் என நல்லிணக்க கருத்தியலில் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மிக ஆழமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நாடு பல மொழி, பல இன, பல கலாசார விழுமியங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு அப்பால், ஒற்றையாட்சியின் பௌத்த மேலாண்மைக்குள் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனது தலைவிதியை நிர்ணயிக்க இந்த சக்திகள் புறப்பட்டுள்ளன.
““ஒரே நாடு ஒரே மக்கள்'' என்ற கருத்தியல்களுக்குள் இவை அனைத்தும் மிகக் கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. அதாவது இலங்கைக்காக ஒரு புதிய ஒழுங்கமைப்பை உருவாக்கிக் கொள்வதே இந்த சக்திகளின் நோக்கமாகும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய உலக ஒழுங்கமைப்பை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார். அதே பாணியில் இலங்கை அரச தரப்பு; சிங்களப் புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர்; மற்றும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து இலங்கைக்கென புதிய ஒழுங்கமைப்பை உத்தியோகபூர்வ மற்ற றையில் பிரகடனப்படுத்தி செயற்படுத்தி வருகின்றனர். NEW SRILANKAN ORDER என்ற புதிய இலங்கைக்கான இந்த ஒழுங்கமைப்பை தென்னிலங்கை குறிப்பிட்ட ““பயங்கரவாதத்திற்கு'' எதிர்வினை செயற் பாடாக யெற்படுத்த னைகின்றது. இந்த ஒழுங்கமைப்பு ““ஒரே தேசம் ஒரே மக்கள்'' என்ற கருத்தியலுக்குள் வார்த்தெடுக்கப்பட்டதாகும்.
மொத்தத்தில் இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்திற்குள் சிறுபான்மை இனங்கள் சமரசமாகி மூழ்கிப் போகும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதே NEW SRILANKAN ORDER ஆக வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
உண்மையில் 2009 மே 19 உடன் இலங்கை வரலாற்றில் உண்மையான மாற்றம் கண்டிருந்தால் ஜெனீவா குறித்த தீர்மானத்தை இலங்கை எதிர்கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. உண்மையான மாற்றம் ஏற்படாததனாலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வந்தன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும்.
இந்தத் தீர்மானம் இலங்கையின் ““புதிய இலங்கை ஒழுங்கமைப்புக்கு'' இடைஞ்சலாக இருப்பதனாலேயே இதற்கு எதிராக எதிர்ப்பலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவது போல் உள்ளூர் பிரச்சினைகளில் இருந்து மக்களை இலகுவாக திசை திருப்புவதற்கு ஜெனீவா விவகாரம் மிக இலாவகமாகக் கையாளப்பட்டுள்ளது. மறுபுறம் வெற்றி வீறாப்பை இன்னொரு தேர்தல்வரை இழுத்துச் செல்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும் இலங்கை அரச தரப்பு உருவாக்கிக் கொண்டுள்ளது.
இந்த பின்னணியில் இதற்கு மாற்றீடான வியூகத்தை வகுத்து செயற்பட வேண்டிய நிலையில் தமிழ் தலைமைத்துவங்களும் புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர். குறிப்பாக சிறுபான்மையினங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையை இலங்கையின் புதிய சூழல் உணர்த்தி நிற்கின்றது. சிறுபான்மை இனங்களைப் பொறுத்து ஒட்டுமொத்த தமிழ்ப்பேசும் மக்களும் மாலுமி இல்லாத கப்பலிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசியல்வாதிகளும், சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினரும், இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் இணைந்து உருவாக்க உள்ள ““புதிய இலங்கை'' ஒழுங்கமைப்பு கருத்தியலுக்குள் காணாமல் போகும் அபாயத்தையே ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களும் எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்ப்பேசும் மக்கள் இதற்கு முகம் கொடுக்க தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
தமிழர்கள் மத்தியிலும், முஸ்லிம்கள் மத்தியிலுமிருந்து சிவில் சமூகங்கள் தோற்றம் பெற்றுள்ளன. மலையகம் இன்னும் ஆழ்ந்த நித்திரையில் உள்ளது. மலையகம் தனது உறக்கத்தை கலைத்து விழித்தெழ வேண்டும். மலையகத்துக்கென சிவில் சமூகம் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
தமிழ் சிவில் சமூகம், மலையக சிவில் சமூகம், முஸ்லிம் சிவில் சமூகம் என்பன சிங்கள சிவில் சமூகத்துடன் கைகோர்த்துப் பயணத்தை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத முடியும். அது மாத்திரமல்ல சகல மக்களும் இணைந்ததான புதிய இலங்கைக்கான ஒழுங்கமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.
““அதாவது ஒரே தேசம்'' ஒரே மக்கள் என்ற கருத்தியலுக்கப்பால் பல்லின பல கலாசாரத்திற்குள்ளான வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் காப்பத்ததிற்குள் இலங்கை நுழைய முடியும்.
No comments:
Post a Comment