சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் அமெரிக்காவில் கூறிய பொருளாதார புள்ளிவிபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை
எனக் கருத்துக்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளியுறவு அமைச்சர் பீரீஸ், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்த புள்ளி விபரங்கள் தொடர்பிலேயே இவ்வாறான கருத்தினை சிறிலங்காவின் பொருளாதார ஆய்வாளர் டாக்டர் முத்துகிருஷ்ண சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.
பிபிசியின் தமிழோசைக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், சிறிலங்காவின் பல பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதம் எனவும், போருக்குப் பின் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 22.9 சதவீதம் வளர்ந்துள்ளது எனவும் அமைச்சர் பிரீஸ் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தவறான தகவல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும் போது 2010ம் ஆண்டில் வட மாகணத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது உண்மையாயினும், போர் நிறுத்த காலத்திலும் இப்படியான ஒரு வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் அந்த வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை. வட மாகாணத்தில் தற்போது காணப்படுவதாகச் சொல்லப்படும் பொருளாதார வளர்ச்சி தொடருமா என்பதும் கேள்விக்குறியே எனும் நிலையில், அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் கூறியது உண்மைக்கு முரணானது.
தற்போதைய ஆட்சியாளர்கள் பிரச்சார யுக்தியாகத் தெரிவித்து வரும், அரசியல், மனித உரிமை விபரங்களின் திரிபுகள் போலவே அமைச்சரின் பொருளாதாரத் தகவல்களும் திரிபுபடுத்தப்பட்டவையாகவே உள்ளன.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்ற வகையில் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் மூலம், வெளிநாடுகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டு அவர்களை தவறான வழியில் நம்ப வைக்கும் நடைமுறையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment