Translate

Wednesday, 23 May 2012

பொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு _


  பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். 


இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்குரிய சில விடயங்களை அறியமுடிந்தது. இந்தக் கோயில்கள் பாதுகாப்பாக உள்ள பொலன்னறுவைத் தொல்லியல் சின்ன வலயங்களுக்கு மிகத் தூரத்தில், ஹிங்குராங்கொட வீதியில் 2 கி.மீ தொலைவிலுள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீதி மாட்டுவண்டிப் பாதையாக இருந்தது. இம்மூன்று கோயில்களிலும் பெருந்தொகையான தமிழ்ச்சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மூன்றாம் சிவாலயம்
மூன்றாம் சிவாலயத்தைப் பொறுத்தவரையில் அதனை அகழ்வுசெய்து கண்டறிந்தவர்கள் சாசனங்களை அவதானிக்கவில்லை. இந்தப்பணி ஏறக்குறைய 106 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. கோயிலைப்பற்றிய அகழ்வாய்வு அறிக்கையிலும் அங்குள்ள சாசனங்கள் பற்றி எதுவித குறிப்புகளும் காணப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தொல்பொருளியல் திணைக்களம் இக்கோயில் பற்றி புதிதாக எந்தப் பணியினையும் நிறைவேற்றவில்லை. சில தினங்களுக்கு முன்பு இக்கோயில் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. நேரே பார்த்தபொழுது கட்டிடத்தின் எந்தப் பகுதியாவது சேதமடையவில்லை என்பது உறுதியாகியது. ஆனால் மூலஸ்தானத்திலுள்ள உடையாரைப் பெயர்த்தெடுத்து கீழே நிலத்தை மிக ஆழமாகத் தோண்டியுள்ளனர். இது புதையல் தேடுவோரின் வேலை போலவே தெரிகின்றது. அதிக்ஷ்டானத்தில் குமுதப்படையில்,(வாசல்முகப்பில்) கோயிலின் மூன்று பக்கங்களில் சாசன வாசகங்கள் மிகச் சிறிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளன. இவை மிகத் தெளிவாகத் தெரிகின்றன. மேலும், இக்கோயிலின் வாசற்படியிலும் முகமண்டபத்து நுழைவாயிற் கதவின் மேலமைந்த உத்திரத்திலும் இரண்டு வரியில் எழுதப்பட்ட சாசனம் தெளிவாகத் தெரிகின்றது. கோயிலின் தெற்குப் பக்கத்தில் துண்டங்களாகக் காணப்படும் கருங்கற்கள் பலவற்றில் எழுத்துகள் தெரிகின்றன. இக்கோயில் கட்டட அமைப்பில் வானவன் மாதேவி ஈஸ்வரத்தை முன்மாதிரியாகக் கொண்டது. இது பாதுகாக்கப்படவேண்டிய ஓர் அரும் தொல்பொருட்சின்னம். அங்குள்ள சாசனங்களைப் படித்து வெளியிடுவதற்கான முயற்சிகள் மிகவிரைவில் நடைபெறவேண்டும்.

ஐந்தாம் சிவாலயம்
மூன்றாம் சிவாலயத்திற்கு எதிர்ப்புறத்தில் தெருவின் மறுபக்கத்தில் அமைந்திருப்பது ஐந்தாம் சிவாலயத்தின் அழிபாடுகள். இதுவே பொலன்னறுவைக்காலத்து இந்துக் கோயில்களில் மிகவும் பெரியது. செங்கற்கட்டுமானம். வழமையாகவுள்ள கட்டடங்களுக்கு மேலாக மூன்று பெரும் மண்டபங்களும் அமைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் முன்னால் அமைந்த மண்டபம் மிகவும் அகலமானது.

கோயிலில் மிகவும் உயரமான தூண்கள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மூலஸ்தான, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றின் நுழைவாயிலில் அமைந்த தூண்களிலே சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. மண்டபம் ஒன்றிலே உடைந்த சாசனம் எழுதிய பல கற்கள் காணப்படுகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகளாக மழையினாலும் வேறு இயற்கை சக்திகளினாலும் பாதிக்கப்பட்டதால் அவற்றிலே பெருமளவிற்கு எழுத்துகள் சிதைந்துவிட்டன. ஆயினும் மிக நுட்பமான முறையில் படியெடுப்பதன் மூலமும் படம் எடுப்பதன் மூலமும் அவற்றின் சில பகுதிகளையேனும் மீட்டுக்கொள்ள முடியும்.

விக்ஷ்ணு கோயில்
அருகிலுள்ள விக்ஷ்ணு கோயிலில் ஏனைய இரண்டு கோயில்களைக் காட்டிலும் கூடுதலான அளவிலே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. நுழைவாசற்படி மூலஸ்தானப்படி ஆகியவற்றிலும் பல தூண்களிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மைக்காலத்திலே சேதமடைந்துள்ள மூலஸ்தானப் படியிற் சதுரவடிவில் அமைந்த மிக நீளமான தூண்களை அடுக்கிவைத்துள்ளனர்.

மேற்புறத்திலுள்ளவற்றிலே சாசனங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்தக் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சாசனம் எழுதிய, துண்டமான கற்கள் காணப்படுகின்றன.

ஓர் அருங்காட்சியகத்திலே, தூண்சாலையிலே நிரைநிரையாக பல வரிசைகளில் நிறுத்தி வைக்கக்கூடிய சாசனம் எழுதிய தூண்கள் ஐந்தாம் சிவாலயத்திலும் அதனை அடுத்து இருக்கும் விக்ஷ்ணு கோயிலிலும் காணப்படுகின்றன. இச்சாசனங்கள் அனைத்தும் 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. சமய வழிபாடுகள், சமூகநிலைகள் என்பன பற்றி இவற்றிலே மிகவும் பயனுடைய விபரங்கள் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொலன்னறுவை நகரத்து மறைந்துபோன வரலாற்றின் ஓர் அத்தியாயத்தை இவற்றின் மூலம் மீட்டுக்கொள்ள முடியும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.” எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் உறுதிபடத் தெரிவித்தார். ___

No comments:

Post a Comment