Translate

Saturday, 26 May 2012

மீள்குடியேறும்நாளை அறிவிப்பதாகக் கூறி ஏமாற்றப்பட்ட கதிர்காமர் முகாம் மக்கள்; ஆவலுடன் காத்திருந்தவர்கள் கொதிப்பு

news
 முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட இறுதிப்போரின் இறுதிக்கணங்கள் கழிந்த பகுதிகளைச் சொந்த இடங்களாகக் கொண்ட மக்களின் மீள்குடியமர்வுக் கனவுகள் நேற்று நசுக்கப்பட்டன. இதனால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த மக்கள் படையினரையும் அரச அதிகாரிகளையும் திட்டித் தீர்த்தனர்.
 
 
தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் சுமார் 6,000 பேர் வவுனியா மனிக் பாமில் உள்ள கதிர்காமர் முகாமில் தங்கியுள்ளனர். அவர்களை ஜுன் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மீளக்குடியேற்றுவதாக அமைச்சர்கள் உறுதியளித்திருந்தனர்.
 
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த மக்களுக்கு நலன்புரி நிலைய கட்டளைத் தளபதியான இராணுவ அதிகாரியால் ஒரு தகவல் தரப்பட்டது. மறுநாளான நேற்றைய தினம் காலை ஒரு கூட்டம் நடக்க இருப்பதாகவும் அதில் வைத்து மீளக்குடியமர்வுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அதிகாரியால் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சொந்த இடம் திரும்பும் ஆவலுடன் மக்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். பலர் மூடை முடிச்சுக்களைக் கட்டினர். வேறு சிலரோ ஒருபடி மேலேபோய் தமது பொருள்களை ஏற்றிச் செல்வதற்கான வாகனங்களையும்கூட வாடகைக்குப் பேசினர்.
 
இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் காத்திருந்த மக்களுக்கு நேற்று பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. நேற்றுக் காலை 9.30 மணிக்கு கதிர்காமர் முகாமுக்கு வந்த அதிகாரிகள் மீள்குடியமர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற தகவலைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றனர்.
 
நலன்புரி நிலையங்களின் கட்டளைத் தளபதி கேணல் பிரேம்லால், கதிர்காமர் நலன்புரி நிலைய இணைப்பாளர் லெடினன்ட் கேணல் பாலித, நலன்புரித் திட்ட இணைப்பாளர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சொர்ணபால ஆகியோர் நேற்றை கூட்டத்தை நடத்தினர். 
 
"ஆனந்தபுரத்தில் கண்ணி வெடித்ததால் படையினர் இருவருக்கு கைகள் போய்விட்டதாகக் கூறிய அவர்கள், இப்போதைக்கு மீள்குடியேற்றம் இல்லை என்றார்கள். இன்னும் 3 மாதங்களுக்குள் மீளக்குடியேற்றுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதை எப்படி நம்புவது?'' என்று உதயனுக்குத் தெரிவித்தார் ஒருவர். 
 
"நாங்கள் மீளக்குடியேறப்போகிறோம் என்ற ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் வந்தோம். எங்கள் இடத்துக்கு எப்போது போவோம் என்ற திகதிகளை அறிவிப்பதாகக் கூறித்தான் அழைத்தார்கள். ஆனால் பின்னர் அதுபற்றி ஒன்றுமே கூறவில்லை. பிறகேன் கூட்டம் கூட்டினார்கள் என்றே தெரியவில்லை'' என்று குமுறினார் மற்றொருவர்.

No comments:

Post a Comment