Translate

Wednesday 23 May 2012

ஈழத் தமிழ்க் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் நடந்த கதி!

Posted Imageகடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


அவுஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் ரஞ்சினையும் அவரது இரு குழந்தைகளையும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்" என அறிக்கை அனுப்பியுள்ளதால், கணவரிடமிருந்து அவர்களைப் பிரித்து சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு முகாமுக்குஅனுப்புவதற்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்திருக்கின்றார்கள் என்பதுதான் கணேஸ் - ரஞ்சினி தம்பதியருக்கு அங்கு காத்திருந்த செய்தி!


குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததும் தம்பதியர் இருவருமே அதிர்ந்து போனார்கள். ஆறு வயதும் எட்டு வயதும் நிரம்பிய தமது இரு குழந்தைகளுடன் விலாவூட் தடுப்பு முகாமில் காலவரையறையற்ற சிறைவாசம் என்பது மிகவும் கொடூரமான ஒரு தண்டனைதான்!
தமது முடிவை அறிவித்த அதிகாரிகள் கணவரிடம் பேசுவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அதன் பின்னர் கண்ணீர் கண்களை மறைக்க ரஞ்சினியும் இரு குழந்தைகளும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு பின் விமானம்மூலம் சிட்னியிலுள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற கணவரை சமாதானப்படுத்துவதற்கு யாரும் அருகில் இருக்கவில்லை.


அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த ஒரு அமைப்பாக ASIO எனப்படும் அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் எடுக்கும் இவ்வாறான ஒரு தீர்மானத்தையிட்டு யாரும் ஏன்? எதற்காக? எனக் கேள்வி எழுப்ப முடியாது. மேன்முறையிடு செய்யவோ, அந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவோ முடியாது. தமது முடிவுக்கான காரணத்தை அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குக் கூட அவர்கள் சொல்லத்தேவையில்லை!
அத்துடன், இந்த முகாமுக்கு அனுப்பப்படுபவர்கள் விடுவிக்கப்படுவதும் இல்லை, நாடு கடத்தப்படுவதும் இல்லை. இந்த நடைமுறைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் பல தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவருகின்ற போதிலும், அரசாங்கம் எதுவும் செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. இதற்கு ரஞ்சினியும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை.

இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த கணேஸ், ரஞ்சினி இருவருமே அவுஸ்திரேலியாவில் 'அகதி அந்தஸ்து' பெற்றவர்கள். குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடனேயே கடந்த மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஏற்கனவே திருமணமாகி முதலாவது கணவரை போரில் பலிகொடுத்த ரஞ்சினிக்கு 6 மற்றும் 8 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். மெல்பேர்ண் மில்க் பார்க் பாலர் பாடசாலையில் கடந்த வாரத்தில்தான் இவர்கள் சேர்க்கப்பட்டனர்.

கணேஸ் - ரஞ்சினி தம்பதியரின் புதிய இனிமையான திருமண வாழ்க்கைக்கு நீண்ட ஆயுள் இருக்க வில்லை என்பதை கடந்த மே 10ந் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் உறுதிப்படுத்தியது. புதிய வாழ்க்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கான கனவுகளுடன் இருந்த குடும்பம் ஐந்து நிமிட முன்னறிவித்தலுடன் பிரிக்கப்பட்டது.!
ஐந்து நிமிடங்களுக்குள் என்னத்தைத்தான் பேசுவது என்ற உணர்ச்சிப் பிளம்பாக இருந்த தம்பதியர் உரிய நேரத்தில் பிரிக்கப்பட்டனர். கண்களைக் கண்ணீர் மறைக்க தனது இரு பிள்ளைகளையும் அணைத்தபடி கணவரிடமிருந்து ரஞ்சினி விடைபெற்ற அந்தக் காட்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.
போரினால் சீரழிக்கப்பட்ட வாழ்ககையிலிருந்து மீண்டும் வந்து ஒரு புதுவாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற இந்த இனிய கனவு ஒரு நொடியில் கரைந்துபோனது!

'நாங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவே இருந்தோம். ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவுடன் நாம் திருமணம் செய்துகொண்டோம். இப்போது நாம் பிரிக்கப்பட்டுவிட்டோம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளோம். கடந்த காலங்களில் நாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவதித்தோம். இந்தத் துன்பம் இனியும் தொடர வேண்டுமா?" என விரக்தியுடன் கணேஸ் கேள்வி எழுப்பியதாக அவுஸ்திரேலிய 'த ஏஜ்' என்ற பத்திரிகை குறிப்பிட்டிருக்கின்றது.
ரஞ்சினியின் முதலாவது கணவர் இலங்கைப் போரின் போது 2006 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் தனக்காக இல்லாவிட்டாலும் தனது குழந்தைகளுக்காவது நல்தொரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன், ஆபத்து நிறைந்த படகுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு 2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தார் ரஞ்சினி! அதன் பின்னர் இரு வருட காலமாக அவுஸ்திரேலியாவின் பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரஞ்சினியும் குழந்தைகளும் இறுதியாக பிறிஸ்பேர்ணிலுள்ள சமூக தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். அப்போது - அதாவது கடந்த செப்டம்பரில் அவருக்கு 'அகதி அந்தஸ்த்து"ம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அவுஸ்திரேலிய பலனாய்வு நிறுவனத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த அறிக்கை சாதகமானதாக இருந்தால் மட்டுமே அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான நிரந்தர அனுமதி அவர்களுக்குக் கிடைக்கும்.

பிரிஸ்பேர்ணில் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ரஞ்சினியின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்திய அந்த நிகழ்வு இடம்பெற்றது. மெல்பேர்ணிலிருந்து விடுமுறையில் வந்திருந்த கணேஸை ரஞ்சனி சந்தித்தார். இந்தச் சந்திப்பில் ஏற்பட்ட புரிந்துணர்வு திருமணம் செய்துகொள்வது என்ற முடிவுக்கு இருவரையும் கொண்டுவந்தது. கடந்த வருட இறுதிப்பகுதியில் இருவரும் சந்தித்தார்கள். திருமணம் கடந்த மாதம் மெல்பேர்ணில் இடம்பெற்றது. மெல்பேர்ணில் தமது இனிய வாழ்க்கையை இவர்கள் ஆரம்பித்திருந்தார்கள். தமது பிள்ளைகளுக்கு பல வருடங்களின் பின்னர் பாடசாலை ஒன்றைத் தேடிப்பிடித்து அதில் அவர்களைச் சேர்த்தார்கள்....
இவ்வாறு அவர்களுடைய வாழ்க்கை ஆரம்பமாகியிருந்த போதுதான் கடந்த மே 10ந்திகதி அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை கையளிக்கப்பட்டது. குடும்பம் பிரிக்கப்பட்டது. கணவர் மெல்பேர்ணில்... மனைவியும் பிள்ளைகளும் சிட்னி விலாவூட் தடுப்பு முகாமில்....
கொடூரமாகப் பிரிக்கப்பட்டுவிட்ட இந்தக் குடும்பம் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா? இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

இந்தக் கேள்வியை அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலிருந்து செயற்படும் மனித உரிமை ஆர்வலரும், அகதிகள் நலன்களுக்கான செயற்பாட்டாளருமான கரன் மயில்வாகனத்தை இக்கட்டுரையாளர் தொடர்புகொண்டு கேட்டபோது பல முக்கியமான தகவல்களை அவர் தெரிவித்தார்.
'அவுஸ்திரேலிய புலனாய்வு நிறுவனம் குடியேற்றக்காரர் ஒருவர் மீது இவ்வாறானதொரு அறிக்கையை கொடுத்தால் அதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். காரணத்தை வெளிப்படுத்தினால் இவ்வாறான முடிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அனைவரும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதால் அதனை அவர்கள் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள். இவ்வாறு காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், அதற்கு எதிராக எவ்வாறு மேன்முறையீடு செய்வது? இவ்வாறு இதுவரையில் பலர் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை காரணமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களால் மேன்முறையீடு செய்ய முடிவதில்லை" என நிலைமையின் தீவிரத் தன்மையை விளக்கினார் மயில்வாகனம்!

'இவ்வாறு எவ்வளவு பேர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள்?" எனக் கேள்வி எழுப்பிய போது, 'அவுஸ்திரேலியாவின் வெவ்வேறு பகுதிகளில் இவ்வாறு 65 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் 58 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் இளைஞர் ஒருவர் 37 மாத காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மே 10ந்திகதி வியாழக்கிழமை மெல்பேர்ணிலுள்ள தடுப்ப முகாம் ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்று கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இவர் உண்மையில் மயிரிழையிலேயே உயிர் தப்பியிருக்கின்றார்" எனவும் மயில்வாகனம் குறிப்பிட்டார். காரணம் கூறப்படாமல் இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதை இது காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் மற்றொரு இளைஞர் தூக்கில் தொங்கி இங்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக மனித உரிமை அமைப்புக்கள் பலவும் குரல் கொடுக்கின்றன. அதற்கான போராட்டங்களை நடத்தியுள்ளன. எதிர்வரும் 25 ஆம் திகதியும் இவ்வாறான போராட்டம் ஒன்று நடத்தப்படவிருக்கின்றது" எனக் குறிப்பிடும் மயில்வாகனம், இதனை விட சட்டரீதியான நடவடிக்கைகள், அவுஸ்திரேலிய அமைச்சர்களைச் சந்தித்து இதற்கு எதிரான கோரிக்கைகளை முன்வைப்பது போன்ற நடவடிக்கைகளை மனித உரிமை அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் இது தொடர்பில் உரிய பலன் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. இதனைவிட தடுப்புக் காவலில் உள்ளவர்களும் தம்மை விடுவிக்கக்கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

'அவுஸ்திரேலியப் புலனாய்வு அமைப்பைப் பொறுத்தவரையில் அது அந்நாட்டில் மிகவும் பலம்வாந்த ஒன்றாக உள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் கூட அதனிடம் கேள்வி எழுப்ப முடியாது. உண்மையில் சொல்லப்போனால், அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு அந்த நாட்டில் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது. அதற்கு எதிராக யாராலும் எதனையும் செய்ய முடியாத நிலைதான் காணப்படுகின்றது. உண்மையில் அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் புலனாய்வுப் பிரிவின் தீர்ப்பு ஒன்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டவராகவே உள்ளார். ஆனால், அவுஸ்திரேலிய வழமையின்படி அவ்வாறு சட்டமா அதிபர் செயற்படுவதில்லை" என நிலைமைகளை மயில்வாகனம் விளக்கினார். அதாவது தேசிய பாதுகாப்பு என வரும்போது அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவின் முடிவுதான் இறுதியானதாக அமைந்துவிடுகின்றது.
இவ்வாறு அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவால் அடையாளம் காணப்பட்டு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட யாராவது பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்களா? என மயில்வாகனத்திடம் கேட்டபோது, இல்லை எனக் கூறிய அவர், மற்றொரு விடயத்தையும் குறிப்பிட்டார். 'இப்போது ரஞ்சினி பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த இரு பிள்ளைகளுடன்தான் தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். ஆனால், இதற்கு முன்னர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என விலாவூட் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு இலங்கைத் தமிழ்ப் பெண் தடுப்பு முகாமில்தான் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். கடந்த 30 மாத காலமாக அந்தக் குழந்தை அங்குதான் இருக்கின்றது. குழந்தை பிறந்து மூன்று வருடமாகப் போகின்றது. இன்னும் அந்தக் குழந்தைக்கு சுதந்திரம் இல்லை. வெளி உலகத்தைப் பார்க்கமுடியாத நிலை..."
அகதிகள் நலன்களைக் கவனிக்கும் ஒரு செயற்பாட்டாளராக இருப்பதால் விலாவூட் தடுப்பக் காவல் முகாமுக்குள் சென்று வருவதற்கான அனுமதி கரன் மயில்வாகனத்துக்கு உள்ளது. முகாமில் உள்ளவர்கள் மிகவும் விரக்தியான நிலையிலேயே இருப்பதாக அவர் கூறுகின்றார்.
பலவருட காலமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு பெருங்கொடூரங்களை அனுபவித்துவருகின்றார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதிக்குக் கூட ஒரு கட்டத்தில் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை 14 வருடங்களாகக் குறைக்கப்பட்டு விடுதலை கிடைக்கும். தடுப்பு முகாம்களிலுள்ளவர்களின் எதிர்காலமோ யாருக்குமே தெரியாததாகவும் இருள்மயமானதாகவுமே காணப்படுகின்றது.

http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment