Translate

Wednesday, 23 May 2012

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவியுங்கள்; நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை


news
 உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டு மென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றில் கோரிக்கை விடுத்தார்.
 
உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ்க்கைதிகளுக்கு அரசு உறுதியான உறுதிப்பாடொன்றை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வடக்கு, கிழக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தின் பிரசன்னத்தை அரசு குறைக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.
 
நாடாளுமன்றில் நேற்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
237 தமிழ் அரசியல் கைதிகள் இன்று (நேற்று) 6ஆவது நாளாக உண்ணாவிரதமிருந்து வருகின்றனர். கொழும்புச் சிறைச்சாலையில் 179 தமிழ்க்கைதிகளும், வவுனியாவில் 33 பேரும், களுத்துறையில் 22 பேரும் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
உண்ணாவிரதமிருந்து வருபவர்களின் உடல் நிலைமை மோசமடைந்து வருகின்றது. எமது கட்சியின் இரு உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டனர். தங்களுக்கு அரசு கடந்த காலங்களில் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதமையால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
 
 இந்த விடயம் அவசரமான விடயமாகவுள்ளது. தங்களக்கு உறுதியான பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வோம் எனக் கைதிகள் கூறுகின்றனர்.
2009ஆம் ஆண்டு படையினரிடம் சரணடைந்தவர்களில் ஊனமுற்றோரும் இருக்கின்றனர். சரணடைந்தவர்களுள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழவளிக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவிக்கின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம்.
 
எந்த விதமான குற்றச்சாட்டுகளுமின்றி இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தளபதிகள் அரசுடன் ஒத்து இயங்கத் தயாரானதில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கின்றன. உண்ணாவிரதமிருந்துவரும் கைதிகளுக்கு அரசு உரிய வகையில் உறுதிப்பாட்டை வழங்கவேண்டும்.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டப்பகலிலேயே அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
மாணவ சங்கத்தின் தலைவர் மீதும் இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவன் மீதான தாக்குதல் தமிழர்களை அந்நியப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கின்றது.
 
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அரசின் கைகள் இல்லையென்றால் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து அரசு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
 
வடக்கிலிருந்து மிதமிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தை அரசு குறைக்கவேண்டும் என்றார் அவர்.
 
 நாளை அரசு பதில்
இதேவேளை, சம்பந்தன் எம்.பி. எழுப்பிய கேள்வி மூன்று அமைச்சுகளுடன் சம்பந்தப்பட்டது. எனவே, அதற்கு நாளை (இன்று) பதிலளிக்கப்படும் என்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
உண்ணாவிரதமிருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. உரையாற்றினார்.
 
அதன்பின்னர் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் மூன்று அமைச்சுகளுடன் சம்பந்தப்பட்டது. எனவே, அதற்கு நாளை (இன்று) பதிலளிப்போம் என்றார்.

No comments:

Post a Comment