தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ்ச் சமூகம் கல்வியறிவில் மேலோங்க வேண்டும். ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான முழுமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் கல்வியில் சிங்களத் தலைமை ஏனோ தானோ நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றது.
ஒரு நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்கான செயற்திட்டங்கள் முதலில் கிராமப்புறங்களிலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமப்புறங்களையும் அபிவிருத்தி செய்தால் மட்டுமே ஒட்டுமொத்த அபிவிருத்தியென்பது சாத்தியப்படும். ஆனால் சிறிலங்காவில் இத்தகைய செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
சிறிலங்காவின் அனைத்து மாவட்டங்களுடனும் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டம் கல்வியில் தனக்கென்றொரு தனியிடத்தைப் பதித்திருக்கிறது. கடந்த மூன்று தசாப்த காலமாக தீவிர யுத்தம் நடைபெற்ற போதிலும் யாழ். குடாநாட்டின் கல்வி முற்றுமுழுதான வீழ்ச்சியாக இருக்கவில்லை. யுத்தம் மொனிக்கப்பட்ட இவ்வேளையில் இழந்த கல்வியை மீளப்பெறவேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் பல கல்விச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் எவையும் முழுமைபெற்றதாக இருக்கவில்லை.
யாழ்.மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் மகா வித்தியாலயங்களை விட கிராமப்புறங்களில் வித்தியாசாலைகள் அதிகமாக உள்ளன. இங்கு தான் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது. இந்தக் கிராமப்புறப் பாடசாலைகள் அதிக வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
அன்றாடம் உலகில் பல விஞ்ஞான ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் தகவல் தொழில்நுட்பம் மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்கிறது. ஒவ்வொரு பாடசாலைகளிலும் தகவல் தொழில்நுட்பம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரதேசப் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் கணனி என்றாலே எனன்வென்று அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
பிரதேச மட்டங்களில் உள்ள இவ்வாறான பல பாடசாலைகள் உயர் கல்வி அதிகாரிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. நகர்ப்புறப் பாடசாலைகளிலேயே உயர் தெய்வங்கள் குடியிருக்கின்றன என்ற ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற உயர் அதிகாரிகள் அனைவரும் அந்தப் பாடசாலைகளையே சென்றடைகின்றன.
அரசினால் வழங்கப்படுகின்ற கணனிகள் போன்றனவும் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற இலத்திரனியல் உதவிகளும் இந்தப் பாடசாலைகளுக்கே கிடைக்கின்றன.
இவற்றை விட யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க வருகின்ற தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்களும் நகர்ப்புறங்களிலுள்ள பாடசாலைகளை நோக்கியே தமது செயற்பாட்டை முன்னெடுக்கின்றன. இவற்றுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் தமது உதவித் திட்டங்களை நகர்ப்புறப் பாடசாலைகளுக்கே வழங்குகின்றனர்.
இவ்வாறாக கிடைக்கின்ற வளங்களைத் தம்வசம் வைத்திருக்கின்ற இந்த நகர்ப்புறப் பாடசாலைகள் சில தாங்கள் ஏதோ இமாலயச் சாதனை வேறு நிலைநாட்டப் போவதாகக் கூறி மாணவர்களுடன் பேரம் பேசியே அவர்களுக்கான அனுமதிகளை வழங்குகின்றன. இதன் போது பெருந்தொகைப் பணம் கறக்கப்படுகின்றன. கணனி வசதிகள் மட்டுமன்றி தொலைபேசி வசதிகள், போட்டோ பிரதி இயந்திர வசதி போன்ற பல வசதிகள் இப்பாடசாலைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் ஏழைப் பாடசாலைகளாகவே இருந்து வருகின்றன. வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் திட்டமிடலற்ற செயற்பாடுகளே இதற்கெல்லாம் காரணமென்று பொதுமக்களும் நலன் விரும்பிகளும் தெரிவிக்கின்றனர்.
நகாப்புறப் பாடசாலைகளை நோக்கி மட்டும் தமது உதவிக்கரங்களை நீட்டுகின்ற உயர் கல்வி அதிகாரிகளும் சர்வதேச நிறுவனங்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் ஒரு விடயத்தை தங்கள் கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியமானது.
நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்த அல்லது மத்தியதர வர்க்கத்திலுள்ள குடும்பங்களின் பிள்ளைகளாவர். அவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை நவீன தொழில்நுட்பம் சார் கல்வியை நோக்கி நகர்த்துவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. அதற்கேற்றாற் போல நகர்ப்பறங்களில் பல தொழில்நுட்பக் கற்கை சார் நிலையங்களும் செயற்படுகின்றன.
ஆனால் பிரதேசப் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் ஏழைக் குடும்பங்களாக இருக்கின்றனர். அவர்கள் கல்வியறிவில் மிகவும் குறைவானவர்கள். பொருளாதார ரீதியாகவும் அவர்கள் அடித்தட்டு நிலையிலேயே இருக்கின்றார்கள். சாதாரண கல்வியறிவைக்கூட பெற்றிருக்காத இந்தக் குடும்பங்கள் நவீன கல்வி நோக்கி தமது பிள்ளைகளை நகர்துவதென்பது எப்போதுமே முடியாத ஒன்றாகவே இருக்கும்.
இந்நிலையில் பிரதேசப் பாடசாலை வளப்படுத்துவதன் மூலம் மட்டுமே அங்கு கற்கின்ற மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியும்.
மேலும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தனியே தகவல் தொழில்நுட்பம் மட்டுமன்றி ஆசிரிய வளம் உள்ளிட்ட பல வளங்களுக்கும் பற்றாக்குறைகளே நிலவுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியதும் அவசியமானதாக இருக்கின்றது.
பல்வேறு நிகழ்வுகளிலும் பொது வைபவங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற கல்வியதிகாரிகள் பலரும் மூன்று தசாப்த காலமாக இழந்த கல்வியை மீளப்பெறவேண்டும் என்று முழங்குகின்றார்களே தவிர அதற்கான ஆக்கபூர்வ செயற்பாடுகள் எதனையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லையென்று பெற்றோர்கள் பலரும் குற்றஞ்சாட்டுவதையே கேட்கக்கூடியதாகவுள்ளது.
- தாயகத்திலிருந்து வீரமணி
No comments:
Post a Comment