வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 8000 ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது.
வலி.வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது. தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையாக நிலை கொண்டுள்ள படைத்தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டுக்கே இவை கோரப்பட்டுள்ளன.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7 ஆயிரத்து 410 ஏக்கரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் இதில் அடங்குகிறது.
தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளின் உயர் பாதுகாப்பு வலயமாக படையினர் தற்போது தாம் வசப்படுத்தி வைத்துள்ள பெரும் நிலப்பரப்பை எல்லைகளாகக் கொண்டு அந்தப் பகுதிகளைத் தமக்கு வழங்குமாறும் அல்லது இது குறித்து உரிய பதிலை வழங்குமாறும் அந்தப் பகுதிப் பிரதேச செயலர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் படையினர் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கின் சில பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர்.
இந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தினுள் 18 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியாகவும் உள்ளடங்குகின்றன.
இந்தப் பகுதிகளுக்குள் மீளக்குடியமர்வதற்கு 7 ஆயிரம் குடும்பங்கள் வரை ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டு மீளக்குடியமர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
இவ்வாறு பொதுமக்களின் தனியார் காணிகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பையே இராணுவமும் கடற்படையும் தமக்கு வழங்குமாறு கோரியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிகேடியர் சண்முகநாதன் என்பவர் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குச் சென்று உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளை வரைபடத்தில் குறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதன் பின்னர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை கோப்பாய் பிரதேச செயலகம் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் உயர் பாதுகாப்பு வலமாகத் தற்போது படையினர் நிலைகொண்டுள்ள காணிகளை படையினருக்கு வழங்குமாறும் இல்லையேல் இது குறித்துப் பிரதேச செயலர்கள் உடன் பதில் அளிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
இதேவேளைநேற்று மாலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது பொதுவிடயம், இது தொடர்பில் பின்னர் ஆராய்வோம் என ஆளுநர் அந்த விடயத்தை மழுப்பியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல், படையினர் தாம் தற்போது நிலைகொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளை உள்ளடக்கி நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தை உள்ளடக்கிய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு படையினரின் பாவனைக்காகப் பறிபோகவுள்ளது. இப்பகுதிகளில் குடியமர்வதற்கு நீண்ட காலமாக மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் படையினரின் இந்த நில ஆக்கிரமிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment