எம் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழர்களே, அகத்திலுள்ள தமிழர்களே விடுதலையைப் பற்றி, புலிகளைப் பற்றி, போராட்டத்தைப்பற்றி, தலைவனைப் பற்றி பேசும் அருகதை எவனுக்கும் கிடையாது. பேசினால் எறியுங்கள் செருப்பை கழற்றி, அதுவும் நாளைய வரலாற்றில் எழுதப்படும் என்ற நம்பிக்கையுடன்…….!
தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம்.
ஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக இரத்தம் சிந்தினார்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக உயிர் துறந்தார்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களின் உடல்களையா சிங்களவன் சிதைத்து வீசினான்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா சிறைகளில் வாடுகின்றனர்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்கள் அடையாளங்களை தேடிக் கொடுத்தார்கள்?
வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது. தமிழீழம் என்பது தனிநாடு அல்ல. அது தமிழ் நாடு. ஈழம் என்ற நாட்டில் தமிழர்கள் வாழும் அவர்தம் பூர்வீக நிலம் வடகிழக்குத்தான் தமிழீழம். தமிழீழம் என்பது தனிநாடு என்பதும், அதை நாம் இப்போது கேட்கவில்லை என்பதும் அடி நிலை மடையர்கள் பேசும் பேச்சு. தமிழீழம் என்ற சிந்தனையை எத்தனை தமிழர்கள் உயிரில் தரித்துக் கொண்டு சரித்திரமானார்கள் என்பது தெரியுமா?
எத்தனை தமிழர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. தமிழீழம் ஒன்றும் தந்தை செல்வநாயகத்தினதோ, தேசியத் தலைவர் வே.பிரபாகரனினதோ சொத்துக் கிடையாது. அவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அப்பாவித்த தமிழர்களின் சொத்து. தமிழீழம் என்பது மகாத்மாக்களின் திருவாயிலிருந்து வந்த தமிழர்களின் வாழ்க்கை. இப்போது புதிதாக உணர்ச்சி வசப்பட்டவர்கள்தான் போராடினார்கள். 30வருடப் போராட்டம் ஒரு அர்த்தமற்ற போராட்டம். அதற்காக உயிரிழந்தவர்களும் வெறும் உணர்ச்சி மடையர்களா?
எமக்காக உயிர் துறந்தவர்களை, எமக்காக சுடுகலன் சுமந்தவர்களை, எமக்காக மரணத்தின் போதும், மரணத்தின் பின்னும் அவமானம் சுமந்தவர்களை, எமக்காக வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றி இழிவாக யாரும் பேசினால் அடுத்த கணமே காலிலுள்ள செருப்பை கழற்றி வீசியிருக்கவேண்டும். நாங்கள்தான் உணர்சியற்று மௌனிகளாகிப் போனோமே. பிறகென்ன வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோரும் ஏறி மிதிக்கத்தானே செய்வார்கள்.
யுத்தத்தின் கொருரம், அகதி வாழ்வின் அவலம், உறவுகளை பறிகொடுத்த வேதனை தெரியுமா? உணர்சிவசப்பட்டவர்கள்தான் நிச்சயமாக தன்னுடைய உறவுகளின் உயிர் பறிக்கப்பட்டபோது, உரிமைகள் பறிக்கப்பட்டபோது, தெருக்கள் தோறும் தமிழன் கொன்று வீசப்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டவர்கள்தான்.
அன்று அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்காவிட்டால், இன்று சந்ததி எங்கேயோ அடிமை உத்தியோகத்தில் இருந்திருக்கும். தேசியத் தலைவரும், அவருடனிருந்த தளபதிகளும், 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும், ஆயிரமாயிரம் போராளிகளும் போர் வெறியர்கள் இல்லை. அல்லது ஆயுதங்கள் மீது காமம் கொண்டவர்கள் கிடையாது.
ஆயுதப்போராட்டமென்பது எங்கிருந்தோ திடீரென முளைத்த ஒன்றல்ல. அதற்கு முன்னய 30வருட ஜனநாயகப் போராட்டத்தின் நீட்சி. காலம் தமிழர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்தது. வீதிக்கு வீதி சுடப்பட்டோம், ஆயிரமாயிரமாய் காணாமல்போனாம், ஆனாலும் அப்போதும் எங்கள் அடி நெஞ்சில் ஒரு நின்மதி, சந்தோஷம் இருந்தது தமிழர்களின் ஆயுதங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.
ஜனநாயகம் மலர்ந்திருக்கின்றது என்கிறீர்கள், அரசுடன் பேசித் தீர்வு காணலாம் என்கிறீர்கள். யுத்தம் முடிந்துபோனது, தமிழர்களின் ஆயுதங்கள் மௌனித்துப்போனது 3வருடங்கள்.இந்த அரசாங்கத்துடன், சிங்கள பேரினவாத சக்திகளுடன் பேசி எதை கிழித்தீர்கள்? இன்றும் ஒருவேளை சோற்றுக்கு ஏங்கித் தவித்துக் கொண்டு முகாம்களில் இராணுவ வேலிக்குள் ஆறாயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
சொந்த மண்ணில் சென்று வாழ முடியாமல் வீதியில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் கிடந்து ஆயிரக்கணக்கில் தவிக்கும் மக்கள் பற்றித் தெரியுமா? சிறையில் கணவனை, பிள்ளையை விட்டுவிட்டு சென்று பார்க்கச் செலவுக்குப் பணமில்லாமல் நகர வீதியில் பிச்சை எடுக்கும் எம் குலப் பெண்களின் கதை தெரியுமா? சொகுசு வாகனங்களிலிருந்து வெளியில் வந்து இவர்களிடம் போய் சொல் உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் என்று. மறுகணம் அவர்கள் காலிலுள்ள கிழிந்த செருப்புத்தான் பேசும்.
உலகில் சுதந்திரத்திற்காக எம்மைப்போல போராடிய ஏராளமான நாடுகள் இருக்கின்றன. அங்கும் கூட காலத்திற்குக் காலம் போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டன. ஆனால் புதிதாக ஆரம்பிக்கும் ஒரு போராட்டம் அதற்கு முன்னைய போராட்டத்தின் நீட்சியாகவே அங்கெல்லாம் இருந்திருக்கின்றது. இங்குள்ளதைப் போன்று முன்னைய போராட்டத்தை கொச்சைப் படுத்தியிருக்கவில்லை.
இங்கு இதுதானே நடந்து கொண்டிருக்கின்றது. இராஜதந்திரப் போராட்டம் எனப் பேசுவோர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி, அதுவொரு உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் என்றும். அதன் மூலம் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும் பிதற்று கின்றார்கள்.
சரி நாம் கேட்கின்றோம். தந்தை செல்வநாயகம் ஈழத்தமிழர்கள் குறித்துப்பேசிய போது இந்தியாவின் தமிழகத்தில் உள்ளவர்களுக்கே தெரியாது இலங்கையில் சுயத்திற்காக தமிழர்கள் போராடும் விடயம். ஆனால் அடுத்து வந்த 30வருட விடுதலைப் போராட்டம் இலங்கையில் சுயத்திற்காக போராடும் ஒரு இனமிருக்கின்றது, வரலாற்றில் அந்தளவுள்ள வேறு எந்த இனமும் செய்திராதளவு அளப்பரிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் இந்த இனம் செய்திருக்கின்றது என்பது முதற்கொண்டு தமிழர் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் இன்று சர்வதேசம் முளுவதும் புரிந்து கொண்டிருக்கின்றது. அல்லது அறிந்து கொண்டிருக்கின்றது.
ஆயுதப் போராட்டத்தை எம் தலைவன் சரியான நிலைப்புள்ளியில் கொண்டு சென்றான். ஆயுதங்கள் கைகளில் புகுந்து கொண்டபோதே என் தலைவனுக்குத் தெரியும் 30வருடங்களின் பின்னால் இது நடக்கும், இப்படித்தான் நடக்கும் என்று. அதேபோல் இது இப்படி நடக்காது போனால் தொடர்ந்து சிங்களத்தின் கால்களில் தமிழ் இனம் கிடந்து நசுங்கி அழிந்து போகும் என்பதும் எம் தலைவனுக்குத் தெரியும். ஆயுதப்போராட்டம் மௌனித்த இடத்திலிருந்து நீட்சி பெறத் துப்பற்ற நீங்கள் ஆயுதங்களை யாரும் சுமக்க கூடாதென சத்தியப் பிரமாணம் பெறுகிறீர்கள்.
தமிழர் ஆயுதங்களை விரும்பிச் சுமக்கவில்லை, சுமக்கத் தூண்டப்பட்டார்கள், அல்லது காலம் அந்தக் கடமையினை கொடுத்தது. தமிழனை தமிழனாக உலகத்திற்குச் சொன்னது கடந்த 30வருட விடுதலைப் போராட்டமேதான்.
எம் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழர்களே, அகத்திலுள்ள தமிழர்களே விடுதலையைப் பற்றி, புலிகளைப் பற்றி, போராட்டத்தைப்பற்றி, தலைவனைப் பற்றி பேசும் அருகதை எவனுக்கும் கிடையாது. பேசினால் எறியுங்கள் செருப்பை கழற்றி, அதுவும் நாளைய வரலாற்றில் எழுதப்படும் என்ற நம்பிக்கையுடன்…….!
No comments:
Post a Comment