இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்-தெல்லிப்பழைப் பகுதியில் தமது வாழ்வுரிமையை வலியுறுத்தியும், தமது சொந்த இடங்களில் குடியமர அனுமதி கோரியும் ஜனநாயக முறையில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காட்டுமிராண்டித் தனமான முறையிலும், மிகவும் கீழ்த்தரமான வகையிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் BTU தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய காலத்தில் எமது தமிழ் மக்கள் எவ்வாறு அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்தார்களோ அவ்வாறானதொரு போராட்டத்தை தற்போது நிலவுகின்ற முன்னைய அடக்குமுறைகளையும் மீறிய கொடூர அடக்குமுறைக்கு மத்தியில் முன்னெடுத்த வேளையில், ஸ்ரீலங்கா அரசானது தனது கொடிய கரம் கொண்டு போராட்டத்தைத் தடுத்து மக்களை அச்சுறுத்தியதோடு மறைமுகமான வழியில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கழிவு திரவத்தை ஊற்றியும், கற்களாலும் தாக்குதல் மேற்கொண்டமையானது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்காததும் மக்களின் வாழ்விடங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருப்பதும் தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக அடக்கி ஆள முயல்வதையே எடுத்துக் காட்டுகின்றது. அத்தோடு முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் தாயகமான வடக்கு ,கிழக்குப் பகுதிகளில் தொடரும் தமிழர்கள் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், கடத்தல்கள், பாலியல் பலாத்காரங்கள், கலாசார சீரழிவுகள், கொலைகள் மற்றும் மர்ம மரணங்கள் என அனைத்திற்கும் ஸ்ரீலங்கா அரசும், அரச படைகளுமே காரணமாகும்.
போரின் வடுக்களும் ரணங்களும் இன்னமும் மாறாது வாழும் மக்களை சொந்த இடங்களில் இயல்பு வாழ்வுக்குக்கூட அனுமதிக்காது, தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளும், அடிமைவாழ்வுக்குள்ளும் வாழ நேரிடின் ஒவ்வொரு மக்களும் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதை யாராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.
கடந்தகாலங்களில் இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடிய பொழுது, அப்போராட்டத்தைத் தவிர்த்து ஜனநாயக வழியில் உரிமைகளைப் பெறலாம் எனக்கூறிய நபர்களும், நாடுகளுமே தமிழர்களின் இன்றைய இந்த அவல நிலைக்குப் பதில் கூறவேண்டியவர்கள் என்பதோடு, மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும் பட்சத்தில் அதற்குப் பொறுப்பானவர்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
No comments:
Post a Comment