அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரிவதுபோன்றே, அரசாங்கத்திலுள்ள இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களை உடனடியாக வெளியேற்றாவிட்டால் மஹிந்த அரசிலிருந்து வெளியேற்றாவிட்டால், அரசு கவிழும் அபாயம் உள்ளதாகவும் இவ்வாறான இனவாதிகள் இந்த நாட்டில் தோன்றியமையானது சிங்கள, பௌத்த மக்கள் செய்த 'பாவம்' எனவும் கருணாரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரினவாத அமைச்சரான சம்பிக்க ரணவக்க இனவாதத்தைத் தூண்டும் வகையில் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பிலேயே கருணாரட்ண இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரியும். அதேபோன்று தான் அரசாங்கத்திலுள்ள இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும். ஜனாதிபதி தன்னையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இன வாதிகளை வெளியேற்ற வேண்டும். வெகு விரைவில் இது இடம்பெறும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மனதார விருப்பமில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்காது. அதன்போது ஆட்சியை தொடர முடியாது போகும்.
எனவே மிக விரைவில் அரசிற்குள்ளிருக்கும் இனவாதிகள் வெளியேற்றப்பட்டு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் நிலைமை உருவாகும் என விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment