Translate

Friday 15 June 2012

புலிகள் வெளியிடாத ரகசியம்: கிட்டு, சென்னை அருகே வெடித்த கப்பலில் ஏன் ஏறினார்?


புலிகள் வெளியிடாத ரகசியம்: கிட்டு, சென்னை அருகே வெடித்த கப்பலில் ஏன் ஏறினார்?
விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) இந்தியக் கடலில் வைத்து கப்பலுடன் வெடித்துச் சிதறியது எப்படி? இது பற்றி முன்பு நான்கைந்து வெவ்வேறு விதமாக கூறப்பட்டு வந்தன. அதில் எந்தக் கதை நிஜம் என்பதில் குழப்பங்கள் இருந்தன.
விடுதலைப் புலிகள் இலங்கையில் பலமாக இருந்தபோது, கிட்டுவின் இறப்பு எப்படி நடந்தது என்று விலாவாரியாக வெளியிடவில்லை.

கிட்டு கப்பலுடன் வெடித்துச் சிதறியது பற்றிய நிஜமான கதை தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களும், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களாக இருந்தார்கள். அவர்கள் யாரும் அப்போது வாய் திறந்து எதையும் கூறவில்லை. புலிகளின் ரகசியம் காத்தல் அதற்கு காரணமாக இருந்தது.
இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக தெரிந்த ஓரிருவரே உயிருடன் உள்ளார்கள். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதற்கு ஒரு பதிவு வேண்டும் அல்லவா?
சரி, இந்த விஷயத்தில் நிஜம் என்ன? உண்மையில் என்னதான் நடந்தது?
சில ஐரோப்பிய நாடுகளில் மாறி மாறி இருத்த கிட்டு, கடைசி நாட்களில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை, கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தோம். (அவற்றைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) அதன்பின் போலந்தில் இருந்து கிட்டுவை, தாய்லாந்துக்கு அழைத்துக் கொண்டார் கே.பி.
கிட்டுவை தாய்லாந்தில் இருந்து புலிகளின் கப்பல் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பி வைப்பதே திட்டம்.
இலங்கை கடற்படையினரின் கண்களில் சிக்காமல் கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் கொண்டு செல்வதே ரிஸ்க் அதிகமான காரியம். அதிலும், கப்பலில் கிட்டு போன்ற புலிகளின் முக்கியஸ்தர் செல்வதால், தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. கிட்டு செல்வதற்கான கப்பலை செலுத்துவதற்காக கேப்டன் ஒருவரை தேர்ந்தெடுத்து, தொலைத் தொடர்பு சிறப்பு பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார் கே.பி.
எதற்காக இந்த விசேட பயிற்சி? அந்த நாட்களில் (90களின் துவக்கத்தில்) புதிதாக வந்திருந்த தொழில்நுட்பம் ஒன்று தொடர்பான பயிற்சி அது. அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதையும் ஏன் சொல்ல வேண்டும் என்ற காரணம், தொடர்ந்து படிக்கும்போது உங்களுக்கே புரியும்.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் கிட்டு தாய்லாந்துக்கு வந்து சேர்ந்தார். அப்போது, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக கே.பி. இருந்தார். இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள் அனைத்துமே கே.பி.-யின் தலைமையில் இயங்கிய பிரிவால் அனுப்பப்பட்டு வந்தன.
புலிகளின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்திருக்கும். புலிகள் உபயோகித்த ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள், அநேக தருணங்களில் இலங்கை அல்லது இந்திய ராணுவங்களிடையே கூட இருந்ததில்லை. அவை லேட்டஸ்ட் மாடல்களாக இருக்கும்.
இதற்கு காரணம், மார்க்கெட்டில் புதிய தொழில்நுட்பம் ஏதாவது வந்துவிட்டால், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு உடனடியாக வாங்கி, இலங்கைக்கு அனுப்பி விடுவது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டுப் பிரிவுக்கு கே.பி. பொறுப்பாளராக 2003-ம் ஆண்டுவரை இருந்தார். அதுவரை இதுதான் வழமையாக இருந்தது.
1992-ல் சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பம் மார்க்கெட்டுக்குள் வந்தது. பல பெரிய நிறுவனங்களே அதை வாங்கத் தயங்கிய ஆரம்ப நாட்களில், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு, சட்டலைட் டெலக்ஸ் உபகரணங்களை வாங்கியது.
1990களில், புலிகள் தமது தொலைத் தொடர்புகளுக்கு, ஐ-காம், YESU-747 தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பம் அறிமுகமாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரத்தியேகமாக பயன்படுத்த முதலில் சட்டலைட் டெலக்ஸ் உபகரணம் ஒன்று புலிகளின் வெளிநாட்டுப் பிரிவால் வாங்கப்பட்டது.
அந்த நேரத்தில், கிட்டுவும் தாய்லாந்து வந்து, இலங்கைக்கு செல்வது என்று முடிவாகியதால், கிட்டு செல்லவிருந்த கப்பலில் சட்டலைட் டெலக்ஸை பயன்படுத்துவது என்று திட்டமிட்டார் கே.பி.
கிட்டு செல்வது பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தாய்லாந்தில் சுமார் 2 வாரங்கள் கிட்டு, ரகசிய இடம் ஒன்றில் தங்கியிருந்தார். கிட்டு கப்பலில் இலங்கை செல்லப்போகும் விஷயத்தை எந்தவொரு தொலைத் தொடர்பு உரையாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியம் காக்கப்பட்டது. காரணம், புலிகளின் தொலைத்தொடர்பு உரையாடல்களை இடைமறித்து அறிந்து கொள்வதில், இலங்கை, இந்திய உளவுத்துறைகள் உட்பட சில வெளிநாட்டு உளவுத்துறைகளும் ஆர்வமாக இருந்தார்கள்.
இதனால்தான், புதிதாக வந்த சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பத்தை கிட்டு செல்லப்போகும் கப்பலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பத்தை இடைமறித்து அறியும் உபகரணங்கள் அப்போது இருக்கவில்லை. (இப்போது உள்ளன)
இந்த சட்டலைட் டெலக்ஸ் உபகரணத்தை நடுக்கடலில் நகரும் கப்பல் ஒன்றில் வைத்து இயக்கும் பயிற்சிக்காகவே, கேப்டன் ஒருவரை சிங்கப்பூர் அனுப்பி வைத்திருந்தார் கே.பி.
இந்த விபரங்களை ஏன் விலாவாரியாக சொல்கிறோம் என்றால், இந்த சட்டலைட் டெலக்ஸ் உபகரணமே, கிட்டுவின் இறப்புக்கு மறைமுகமான ஒரு காரணமாக இருந்தது.

No comments:

Post a Comment