Translate

Tuesday, 19 June 2012

வடக்கில் இராணுவ பிரசன்னம் சிறுவர்களை பெரிதும் பாதிக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புகள்

வட பகுதியில் இராணுவ பிரசன்னம் தொடர்ந்தும் இருப்பது சிறுவர்களை உள ரீதியாக பெரிதும் பாதிக்குமென சிறுவர்களுக்கான தொண்டர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் முன்னாள் மோதல் வலயங்களில், குறிப்பாக வட பகுதியில் பாரியளவில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிரசன்னமாகியுள்ளமை சிறுவர்களின் மன நிலையில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துமென சிறுவர் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக யுனிசெப் கூறியுள்ளது.
ஆனால், வடக்கில் இராணுவம் தொடர்ந்தும் பிரசன்னமாகியுள்ளமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் சுட்டிக்காட்டியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி, முன்னாள் சிறுவர் போராளிகளுக்கான உளவியல் ரீதியிலான ஆதரவு, மற்றும் சிறுவர்களை குடும்பங்களுடன் இணைத்தல் ஆகிய சேவைகளுக்காக 3 புனர்வாழ்வு நிலையங்கள் 2008 இன் பின்னர் அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக “சேவ் த சில்ட்ரன்’ அமைப்பின் இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளர் மேனகா கல்யானேரட்ன ஊடகம் ஒன்றில் கருத்துக் கூறியுள்ளார்.
போருக்குப் பின்னரான இலங்கையில், குறிப்பாக மோதல்கள் நடைபெற்ற பகுதியில் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக மேனகா தெரிவிக்கையில்;
புனர்வாழ்வு முகாம்களில் இருந்த சகல சிறுவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  இச்சிறுவர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லை என்பது நல்ல விடயம்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. தற்பொழுது சிறுவர்கள் தமது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
நாம் தொடர்ந்தும் வடக்கில் பணிபுரிந்து வருகின்றோம். இந்நிலையில் சிறுவர்களின் நலன்புரியில் சடுதியான அபிவிருத்தி இடம்பெற்றுள்ளதெனக் கூறிவிட முடியாது. 
பெண்களை குடும்பத் தலைவர்களாகவும் பிரதான வருமான மீட்டாளர்களாகவும் கொண்ட பல்வேறு குடும்பங்கள் அங்கு உண்டு. அவ்வாறான குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கு நாம் அவசிய உதவிகளைச் செய்ய வேண்டும்.
ஆனால், போர் தொடர்பாக இச்சிறுவர்களின் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ள உருவினை அல்லது வரைவிலக்கணத்தை எளிதில் மாற்றுவதென்பது கடினமான விடயம்.
உளவியல் ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கை அங்கு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. உண்மையான சிறந்த முன்னேற்றம் அங்கு இல்லை.
அதேவேளை வட பகுதியில் இராணுவப் பிரசன்னம் தொடர்பாக குறிப்பிட்டால், வட பகுதியிலுள்ள வீதிகளில் இருபுறமும் இராணுவ முகாம்களைக் காண முடிகின்றது. அதேவேளை கிராம உட்புறங்களிலும் சிறுசிறு முகாம்கள் உள்ளன.
அதேவேளை சில பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இதனால் அங்கு இராணுவப் பிரசன்னம் இருக்க வேண்டும்.
ஆனால், போரினை நேரடியாக அனுபவித்த சிறுவர்களை இராணுவப் பிரசன்னம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறுவர்கள் போர் என்ற பலத்துடனேயே தொடர்ந்து  வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் போர் இன்னமும் நிறைவடையவில்லை என்ற நிலைப்பாட்டுக்கு இதுபோன்ற  செயற்பாடுகள் இட்டுச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment