Translate

Sunday, 17 June 2012

காங்கிரஸ்காரர்களே என் கழுத்தை அறுத்து விட்டனர்: திருப்பதி தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் கதறி அழுதார்


ஆந்திராவில் 18 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்கட்சி அமோக வெற்றி பெற்றது.
 
இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதியில் 15 தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. மேலும் நெல்லூர் எம்.பி. தொகுதியையும் கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியில் திருப்பதி குறிப்பிடத்தக்கது.
 
திருப்பதியில் கடந்த தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி நின்று வென்ற தொகுதியாகும். பின்னர் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துக் கொண்டார். அதற்கு பிரதிபலனாக மேல் சபை எம்.பி. பதவி கிடைத்தது. எம்.பி.யானதை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை சிரஞ்சீவி ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடந்தது.
 
காங்கிரஸ் வேட்பாளராக வெங்கட்ரமணா நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் கருணாகர ரெட்டி போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி பிரசாரம் செய்தார். தேர்தல் கணிப்பு கூட திருப்பதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறியது.
 
ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கருணாகர ரெட்டி அமோகமாக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை விட 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இவர் பெற்று இருந்தார்.
 
தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட்ரமணா திருப்பதியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கதறி அழுதார்.
 
வெங்கட்ரமணா கூறியதாவது:-
 
திருப்பதியில் காங்கிரஸ்காரர்களே என் கழுத்தை அறுத்துவிட்டார்கள். எனக்கு எதிராக அவர்கள் செயல்பட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும். சரியான நேரத்தில் அதனை தெரிவிப்பேன். எனக்கு துரோகம் செய்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள்.
 
இவ்வாறு கூறும்போது, அவர் ஓ...வென்று கதறி அழுதார். அதன்பின் அவரால் பேச முடியவில்லை. இதனால் பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment