

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுகுறித்து ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாநாட்டில் பேசும்போது, இலங்கையின் கடல் எல்லைக்குள் புகுந்து மீன் வளங்களையும் அரிய கடல் செல்வங்களையும் நம் மீனவர்கள் கொள்ளையடிப்பதாகக் குற்றம்சாட்டி, சர்வதேசச் சட்டப்படி இதற்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்!
காலங்காலமாக இலங்கைத் தமிழர்களின் ரத்தத்தைக் குடித்து தாகம் தணியாமல், மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவித்து, சிறையில் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்திச் சுகம் காணும் இலங்கை அரசின் பொறி கலங்கும் அளவுக்கு இந்தியா எப்போதோ கண்டித்து இருக்க வேண்டும். அப்படிப் பேசி இருந்தால், சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏறி நின்று தலை கவிழ்ந்து பதில் சொல்லக்கூடிய நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டு இருக்கும்.
மத்தியில் ஆள்பவர்கள் அதைச் செய்யத் தவறியதால்தான், வாய்க் கொழுப்பு எடுத்து மறுபடியும் சீண்டிப் பார்த்து இருக்கிறார் ராஜபக்ஷே. மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமரும் அவருடைய அதிகார பரிவாரங்களும் ராஜபக்ஷேவின் இந்தப் பேச்சுக்கும் பதிலடி கொடுக்காமலேயே திரும்பிய கொடுமையை என்னவென்று சொல்வது?
கதறிய பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்து, கெக்கலி கொட்டிச் சிரித்தபடி துச்சாதனன் நடை போட்ட சமயத்தில், அதை வாய் மூடி வேடிக்கை பார்த்தோரை நோக்கி, நெஞ்சு கொதித்து பாரதியார் பாடிய வரிகள் அல்லவா ஞாபகத்துக்கு வருகின்றன.
வெறி பிடித்த இலங்கை, சீனாவின் ஏவல் பிராணி ஆகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக... தமிழனின் ஊனையும் உயிரையும் தொடர்ந்து அதற்கு இரையாக்கிக்கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் ராஜதந்திரமா பிரதமரே?
தலையங்கம்
ஆனந்த விகடன்
No comments:
Post a Comment