Translate

Tuesday, 17 July 2012

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: நெடுமாறன் கண்டனம்


சென்னை, ஜூலை 16: விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற வழக்கமான குற்றச்சாட்டைக் கூறி விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் ஆளாகி வரும் நிலையில் தமிழீழம் அமைக்க புலிகள் போராடி வருகின்றனர். இதனால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் எப்படி அபாயம் ஏற்படும் என்பது புரியாத மர்மமாகும். இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் உதவி பெறுவதில்லை என்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர்.
 புலிகள் வலுவுடன் இருந்தவரை இலங்கையில் எந்த வெளிநாடும் காலூன்ற முடியவில்லை. இப்போது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு காலூன்றி விட்டன. புலிகள் வலுவுடன் இருந்தபோது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரால் தாக்க முடியவில்லை. ஆனால், இப்போது நமது மீனவர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனை உணராமல் விடுதலைப் புலிகளை எதிரியாகக் கருதுவது கண்டிக்கத்தக்கது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment