Translate

Tuesday, 17 July 2012

கூட்டமைப்புக்கான வாக்குகள் அரசியல் தீர்வை பெற்றுத்தரும் அம்பாறையில் மாவை எம்.பி.


கூட்டமைப்புக்கான வாக்குகள் அரசியல் தீர்வை பெற்றுத்தரும் அம்பாறையில் மாவை எம்.பி.
news
 எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டு வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.
 
இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா. அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களும் பெரும் சவாலாக இன்று உருவெடுத்துள்ளன.
 
இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாது, தமது அடக்கு முறை, அநீதி, போர்க்குற்றங்களை மூடி மறைக்கவும், சிறுபான்மை சமூகங் களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென உலகுக் காட்டவுமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அரசு பயன் படுத்த முனைந்துள்ளது.
 
இந்த நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாம் செயற்படவில்லை என்று இந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மூலம் காட்டலாமென ஜனாதிபதி நப்பாசை கொண்டுள்ளார்.
 
இதனால் முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் தெளிவாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையிலுள்ளோம். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இடம் பெறும் அரசின் அட்டூழியங்கள் , அநீதிகளைச் சீர் தூக்கிப் பார்த்து, அரசுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும்.
 
ஆனால் அரசு செய்வது எல்லாமே சரியென்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் தீர்மானம், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் விரோதமான தீர்மானமாகும். உலகத்தை ஏமாற்றுவதற்கு அரசுக்குக் கொடுக்கும்  சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை மழுங்கடிக்கச் செய்வதற்கென அரசு இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணைபோகப் போகின்றது என்று தான் நாம் அச்சப்படுகின்றோம்.
 
ஆனால் இந்த வஞ்சகத்தை  அறிந்து கொண்ட முஸ்லிம் மக்கள், முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளேயே  போராடியிருக்கின்றனர். முஸ்லிம் மக்களுடைய இன அடையாளங்களை அழித்து விடுவதற்கும், நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அரசை ஆதரித்து நிற்பது எவ்வளவு தவறானது என்பதைத் தெரிந்து கொண்ட முஸ்லிம் மக்கள் இன்று கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.
 
இதனால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இக் குரலை, முஸ்லிம் காங்கிரஸ் செய்தது தவறு என்று கூறும் மக்களுடைய குரலாக நாம் தெளிவாக அறிந்து வரவேற்கின்றோம்.
 
13 ஆவது திருத்தச் சட்டம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் பங்கு பற்றுவதன் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோமென்று தெளிவற்றவர்கள் சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளரென நாம் அறிகின்றோம்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை 13 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நேரத்திலிருந்து, அச்சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகளுக்கே மாறானதெனவும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஈடாகவில்லை எனவும், நாங்கள் அதை ஏற்க மாட்டோம். இனப்பிரச்சினைத் தீர்வைக் காண்பதற்கு அது அடிப்படையாகக் கூட இல்லை எனவும் ஆணித்தரமாக கூறி வந்திருக்கின்றோம். இந்த எமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்திருக்கின்றோம்.
 
தேர்தலில் ஏன் போட்டி
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்ற கேள்விகளும் தொடுக்கப்படுகின்றன. நாங்கள் போட்டியிடாதிருந்தால் அரசும், எங்களுக்கெதிரானவர்களும் அரசுக்கு சார்பாக வாக்களித்து மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு  மட்டுமல்ல, இனப் பிரச்சினை தீர்வதற்கும், அதனால் மனித உரிமைகள் பேணப்படுவதற்கும் ஆப்பு வைத்து அரசு செய்வது சரி, நாம் செய்வது பிழையெனக் காட்டியிருப்பர்.
 
எனவே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கிறோமென்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் காட்டினால் தான், மக்கள் தீர்ப்பு வழங்கினால் தான் எதிர்காலத்தில் நாம் ஓர் அரசியல் தீர்வை அடைய முடியும். எங்கள் நிலத்தில் நாம் மீளக் குடியேறுவதற்கும், அந்த நிலத்தில் நாம் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும் வழி வகுக்கும்.
 
நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோமென்பதல்ல, இதற்கு எதிராக இருக்கும் அரசை எதிர்க்க வேண்டும். தமிழ், மக்கள் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில்  அரசியல் உரிமையைப் பெற்று ஆளும் உரிமையைப் பெற வேண்டும். இதற்கு இத் தேர்தல் சிறந்த சந்தர்ப்பமாகும். 
 
சிறுபான்மையினங்களான தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக, இராணுவ, மதபேரினவாத  ஆட்சி நடத்தும் அரசின் கொட்டத்தை அடக்கவும் இந்தத் தேர்தல் முடிவுகள் பயன்படும்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசு பக்கம் சார்ந்தாலும் அதற்கு எதிராக இருக்கின்ற முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிப்போமெனச் சொல்வதன் மூலம் வருகின்ற தேர்தலில், தீர்ப்பை வழங்க அவர்கள் முன்வருகின்ற போது அது உலகத்திற்கு எடுத்துக் சொல்லக் கூடிய  சிறந்த தருணமாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment