Translate

Wednesday 25 July 2012

கிழக்கில் தமிழ் மக்கள் தங்களது முழுமையான வாக்குப் பலத்தை காட்டவேண்டும்: த.தே.கூட்டமைப்பு


தமிழ் மக்கள் கடந்த காலத்தைபோல் அல்லாமல் நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முழுமையாக தங்களது வாக்குப் பலத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணசபை தேர்தலையொட்டி தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான வி.ஆர்.மகேந்திரனின் படுவான்கரை பிரதேசத்துக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலையில் ஆரம்பமானது.
அக்கூட்டத்தில் வேட்பாளரான வி.ஆர்.மகேந்திரன், கடந்த காலத்தில் மட்டக்களப்பு நகரம் மற்றும் படுவான்கரை பிரதேச மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தவில்லையென தெரிவித்துள்ளதுடன் இம்முறை அவற்றை முழுமையாக பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
துரோகிகளுக்கு ஒருபோதும் துணைபோகாத மண்ணாக இந்த படுவான்கரை பிரதேசம் உள்ளது. இந்த மண் என்றும் தேசியத்துக்காகவும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மட்டுமே துணை நிற்கும்.
இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 07 ஆசனங்களைப்பெற்று கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்றும் என்று முழுமையாக நம்புகின்றோம் என குறிப்பிட்டார்.
அதற்கு இந்த படுவான்கரை பிரதேச மக்கள் அணி திரண்டுவந்து வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என இங்கு கட்சி உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கொக்கட்டிச்சோலை தமிழரசுக்கட்சியின் கிளையின் உறுப்பினர்களை அறிவுறுத்தும் கூட்டமாக இது நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா ஆகியோரும் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment