Translate

Tuesday, 17 July 2012

வெற்றி : எட்டிவிடும் உயரம்தான்!


“உன் அம்மா, அப்பாவில் தொடங்கி பரம்பரையே பண்ணைக்கு அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்தவர்கள்தான். நீயும் அதைத்தான் செய்யப்போகிறாய். அப்படியிருக்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன கிழிக்கப் போகிறாய்?”
“மற்றவர்கள் என்னை இளக்காரமாக மதிப்பிட்ட தருணங்கள்தான், என்னை நானே உலகத்துக்கு நிரூபித்துக்கொள்ள உதவியது” டாக்டர் சூர்யா பாலி, எம்.பி.பி.எஸ்., பைரலி காவோன் கிராமம், ஜான்பூர், உத்தரப் பிரதேசம்.
ஹோலி, தீபாவளி மாதிரி பண்டிகைகள் வந்தாலே சிறுவன் சூர்யாவுக்கு குஷி. நல்ல சாப்பாடு சாப்பிடலாம். கையில் தட்டு ஏந்திக் கொண்டு கிராமத்திலிருக்கும் பண்ணை வீடுகளுக்கு செல்வான். சில வீடுகளில் இனிப்போடு நல்ல சாப்பாடு கிடைக்கும். சில வீடுகளில் எரிச்சலோடு துரத்தி அடிப்பார்கள். கேலி, கிண்டல் எதுவாக இருந்தாலும் சூர்யாவை பாதித்ததில்லை. பழங்குடி இனத்தில் பிறந்து, பண்ணையில் அடிமையாக வேலை செய்பவருக்கு மகனான தான் இதற்கெல்லாம் சங்கோஜப்படலாமா? சாப்பாடுதான் முக்கியம்.
சிறுவயதில் சூர்யா பச்சை மண். தன்னுடைய வர்க்கம், சாதி, பிழைப்பு எல்லாமே இறைவனால் விதிக்கப்பட்ட இயல்பான விஷயங்கள் என்று வாழ்ந்தான். ஆனால் படிக்காதவராக இருந்தாலும், ஓரளவு விவரம் தெரிந்த அவனுடைய அப்பாவுக்கு அப்படியில்லை. அடிமை சேவகத்தை வெறுத்தார். பழங்குடி இனத்தில் பிறந்த ஒரே பாவத்துக்காக தன்னுடைய பரம்பரையே அடிமை வாழ்க்கை வாழும் அவலத்தை எண்ணி தினம் தினம் கண்ணீர் விட்டார். தன்னைத்தானே நொந்துக்கொண்டு கழிவிரக்கத்தோடு எத்தனைநாளைதான் கழிக்க முடியும்? ஒரு நாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிவிட்டார். மனைவி, குழந்தைகள், பிறந்து வாழ்ந்த கிராமம். எதுவுமே அவருக்கு பொருட்டாகத் தெரியவில்லை. யாருமற்ற தனிமைதான் தன்னுடைய இழிவைப் போக்குமென சித்தார்த்தனைப் போல கிளம்பிவிட்டார்.
தனிமை வெறுத்து மீண்டும் அவர் தன் குடும்பத்தோடு இணைய பத்து ஆண்டுகளாகியது. இடைப்பட்ட காலத்தில் சூர்யாவின் தாய் மீது குடும்பப்பாரம் விழுந்தது. மேல்சாதியினர் வீடுகளில் வீட்டு வேலை பார்த்தார். விசேஷங்களில் சமையல் வேலை. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் கொடுப்பது மாதிரி துண்டு துக்கடா வேலைகள். அதில் வந்த சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு கால்வயிற்று கஞ்சி.
சூர்யாவுக்கு குடும்பச்சூழல் புரிந்தபோது அவன் கிராமத்திலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். கல்வி இலவசம்தான் என்றாலும், பாடப்புத்தகங்கள் வாங்க கொஞ்சம் காசு வேண்டுமல்லவா? காட்டுக்குச் சென்று பேரிக்காய் உள்ளிட்ட பழங்களைப் பறிப்பான். அருகிலிருக்கும் நகரங்களுக்கு சென்று காசுக்கு விற்பான். அதிர்ஷ்டவசமாக சில வருடங்களில் புத்தகத்துக்கு பழங்களை பண்டமாற்று செய்யும் வாய்ப்பு கூட அவனுக்கு கிடைத்தது.
ஏழைவீட்டுக் குழந்தைகள் என்றாலே சிலருக்கு இளக்காரம்தான். சூர்யாவின் ஆசிரியர்கள் சிலர் அவனைக் கேட்டார்கள். “உன் அம்மா, அப்பாவில் தொடங்கி பரம்பரையே பண்ணைக்கு அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்தவர்கள்தான். நீயும் அதைத்தான் செய்யப்போகிறாய். அப்படியிருக்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன கிழிக்கப் போகிறாய்?”
சூர்யாவிடம் பதில் இல்லை. எனினும் கல்வி தன்னுடைய, தன் குடும்பத்தின் நிலையை மாற்றும் என்கிற எண்ணம் மட்டும் அவனுக்குள் வலுவாகப் பதிய ஆரம்பித்தது. நெஞ்சுக்குள் எரிந்துக்கொண்டிருந்த தீ படிக்க, படிக்கத்தான் அடங்கியது. ஒரு பழங்குடியின மாணவன் மற்ற மாணவர்களைவிட நன்றாகப் படிப்பதை அந்தப் பள்ளியின் உரிமையாளரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பண்டிட்ஜி எனப்படும் அவர் சாதி, மத அடிப்படையில் வாழ்ந்து வந்தவர். படிக்க விடாமல் பல தடைகளை ஏற்படுத்த, சூர்யா பள்ளி மாறினான்.
சார்சி எனும் ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தான். அவனுடைய கிராமத்திலிருந்து பதினோரு கிலோ மீட்டர் தூரம். செருப்பில்லை. வெறுங்காலில் அரக்கப் பரக்க அவன் பள்ளிக்கு ஓடுவதைப் பார்த்த கிராமம் சிரித்தது. “பண்ணை வேலை பார்க்குறதுக்கு பட்டணத்துப் பள்ளியில் போய் படிக்கிறானே?”
மழைக்காலங்கள்தான் பிரச்னை. பள்ளிக்குச் செல்ல முடியாது. இரண்டே இரண்டு செட் சீருடைகள்தான் அவனிடமிருந்தது. நனைந்த சீருடைகள் காயாமல் எப்படி பள்ளிக்குப் போவது?
ட்யூஷன் மற்றும் புத்தகச் செலவுகளுக்கு இப்போது சூர்யாவுக்கு வேறு வேலை கிடைத்தது. பள்ளி முடிந்ததும், அருகிலிருந்த சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்ந்தான். பஞ்சர் ஒட்டுவதில் தொடங்கி அத்தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக நிபுணத்துவம் பெற்றான். வந்த வருமானம் கல்விச் செலவுக்கும், ஓரளவு குடும்பச் செலவுக்கும் உதவியது.
எல்லா சிரமங்களையும் கடந்து, எட்டாம் வகுப்பில் சூர்யா முதல் ரேங்க் வாங்கியபோது பள்ளியே ஆச்சரியப்பட்டது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி. அவனுடைய பரம்பரையிலேயே பத்தாம் வகுப்பை கடந்த முதல் ஆள் அவன்தான். இப்போது சூர்யாவுக்கு தன்னுடைய எதிர்காலம் குறித்த ஒரு லட்சியம் தோன்றியது. எப்பாடு பட்டாவது டாக்டர் ஆகிவிட வேண்டும். தனக்கு ஏழு வயது இருக்கும்போது, தன்னுடைய தம்பி மருத்துவவசதி இல்லாமல் மரணித்தது சூர்யாவின் ஆழ்மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது இதற்கு ஒரு காரணம். நிரந்தர நோயாளியாகி விட்ட அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம், மருத்துவராகி அவரை நல்லவிதமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மற்றொரு காரணம்.
பிரச்சினைகளுக்கு இடையில் பண்ணிரெண்டாம் வகுப்பையும், வழக்கம்போல நல்ல மதிப்பெண்களோடு கடந்தார் சூர்யா. மருத்துவம் சேருவதற்கு தேவைப்பட்ட பணத்தை புரட்ட முனைந்தார். தட்டினால் திறக்குமென அவர் நம்பிய எல்லாக் கதவுகளும் பலமாக இழுத்து பூட்டப்பட்டிருந்தன. பதினேழு வயது சூர்யாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. ஏற்கனவே வாழ்க்கை வெறுத்து எப்படி அவருடைய அப்பா ஊரைவிட்டுச் சென்றாரோ, அதுபோலவே யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், எல்லாவற்றையும் துறந்து எங்கோ சென்றார் சூர்யா.
ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று குடும்ப நினைவு வந்தது. தன்னுடைய அண்ணனுக்கு தொலைபேசினார். “உன் கல்விக்காக பணம் புரட்டி வைத்திருக்கிறேன். உடனே ஊருக்கு வா” என்றார் அண்ணன். அதை நம்பி ஊருக்கு வந்தவருக்கு அதிர்ச்சி. அண்ணன் வைத்திருந்த பணமோ வெறும் மூவாயிரம்தான். மெடிக்கல் தேர்வுக்கு பயிற்சி தரும் கோச்சிங் சென்டர் கட்டணத்துக்கே இது சரியாகப் போய்விடும். டாக்டர் கனவை தள்ளிப் போட்டுவிட்டு யதார்த்தத்துக்கு திரும்பினார் சூர்யா. பனாரஸ் ஹிந்து கல்லூரியில் பி.எஸ்.சி வகுப்பில் சேர்ந்தார்.
அற்புதங்கள் நம்ப முடியாதவைதான். ஆனாலும் அவை அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சூர்யா சற்றும் எதிர்பாராத அற்புதம் ஒன்று அவரது கல்லூரி விடுதி வார்டன் மூலமாக நடந்தது. இவரது கதையை, கனவை கேட்டு உருகிவிட்ட அந்த நல்ல மனம் கொண்ட வார்டன், சூர்யாவை டாக்டராக்கி அழகு பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டார். இலவச தங்கும் வசதி, மாதாமாதம் செலவுக்கு ரூ. 500, அட்மிஷனுக்கு பொருளாதார ஏற்பாடு என்று அவர் தடாலடியாக ஏற்பாடு செய்தார். அலகாபாத் மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் கதவுகள் சூர்யாவுக்காக அகலமாக திறந்தது.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வசதியான குடும்பச் சூழலில் இருந்து வருகிறவர்கள். சூர்யாவைக் கண்டு அவர்களுக்கு ஆரம்பத்தில் கோபம் வந்தது. பிற்பாடு கேலி பிறந்தது. சூர்யாவின் நடை, உடை பாவனைகளை எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். பொருளாதாரப் பின்புலம் இல்லாததால் மற்றவர்களை மாதிரி நாம் இருக்க முடியவில்லை என்கிற யதார்த்தம் புரிந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் மற்றவர்கள் தரும் மனவுளைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும். ஏற்கனவே பள்ளி படிக்கும்போது அவர் மேற்கொண்ட வழிமுறைதான்.
சூர்யா ஓரளவுக்கு நன்றாக எழுதுவார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று அவர் அவ்வப்போது எழுதினாலும், இத்திறமையை இதுவரை யாரிடமும் வெளிக்காட்டியதில்லை. தனக்குத் தெரிந்த எழுத்தை பத்திரிகைகளுக்கு தந்து சம்பாதிக்க முடியுமா என்று முயற்சிக்கத் தொடங்கினார். ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சிகளை வழங்கும் வாய்ப்பு இதன் மூலம் அவருக்கு கிடைத்தது.
வேலை, படிப்பு நேரம் தவிர்த்து மீத நேரத்தை கல்லூரி நூலகத்தில் கழிக்கத் தொடங்கினார். தனிமை அவருக்கு வரம். கேலிகளிலிருந்து காக்கும் கேடயம்.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக எம்.பி.பி.எஸ். முடித்து டாக்டர் சூர்யா ஆனார். கனவினை நனவாக்கிப் பார்க்கும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டிவிடுவதில்லை. சூர்யாவுக்கு கிடைத்தது. அடுத்து எம்.டி. படிக்க அதே கல்லூரியில் உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு கிடைத்தது. “என் வாழ்க்கையிலேயே பதினைந்தாயிரம் ரூபாயை ஒட்டுமொத்தமாக இப்போதுதான் பார்த்திருக்கிறேன்” என்றார் சூர்யா.
எந்த கல்லூரியில் மற்ற மாணவர்களால் கேலி செய்யப்பட்டு மனவருத்தம் அடைந்தாரோ, இப்போது அதே கல்லூரியில் பயிற்றுநராக (faculty) மாணவர்களுக்கு பாடம் போதித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் இன் ஹெல்த் மேனேஜ்மெண்ட் (MHM) படிக்க அவருக்கு IFB உதவி கிடைத்திருக்கிறது.
“மருத்துவம் என்பது முழுக்க முழுக்க சேவை அடிப்படையிலான தொழில். பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மருத்துவம் படிக்கக்கூடாது” என்கிறார் டாக்டர் சூர்யாபாலி. க்ளோபல் ஹெல்த் டெவலப்மெண்ட் மிஷன் என்கிற பெயரில் ஒரு அரசுசாரா நிறுவனத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு சேவை செய்கிறார். மருத்துவக் கட்டுரைகளை போஜ்புரி, அவாதி ஆகிய உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து புத்தகங்கள் பதிப்பிக்கிறார். நோய்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல்கள் எழுதி பாடி பிரச்சாரம் செய்கிறார். தன்னுடைய கிராமத்தில் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை உருவாக்குவது அவரது நோக்கம்.
உத்தரப் பிரதேசத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ’கோண்டு’ பழங்குடி இனத்தில் பிறந்த சூர்யா, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் மருத்துவம் கற்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ‘நீ படித்து என்னத்தைக் கிழிக்கப் போகிறாய்?’ என்று, அன்று சூர்யாவைக் கேட்டவர்களுக்கு, இன்றைய அவரது உயரம் மவுனச் சிரிப்போடு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சூர்யாவின் வாழ்க்கை நம்மூர் மாணவர்களுக்கும் சொல்லும் பாடம் ஒன்றே ஒன்றுதான். படிங்க, படிங்க.. அதுதான் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுங்க...

(நன்றி : புதிய தலைமுறை)

No comments:

Post a Comment