சென்னை: ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ, ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் விடுத்துள்ள அறிக்கையில்,”தமிழ் ஈழக் கோரிக்கை இப்போதைக்கு இல்லை என்றும் தனி ஈழத்துக்கான போராட்டமோ, கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணம் இல்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்த செய்தி அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ அளிக்கவில்லை. ஈழப் பிரச்னையில் எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்காத கருணாநிதி இப்போதும் அப்படியே நடந்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) என்ற செத்துப்போன அமைப்பிற்கு காலாவதியான காலத்தில் உயிர்கொடுக்க முயன்று தற்போது, ஈழக் கோரிக்கை எதையும் மாநாட்டில் தீர்மானமாக வைக்கப்போவது இல்லை என்று கூறி ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் தமது துரோக முகத்தை வெளிக்காட்டி உள்ளார் கருணாநிதி.
ஈழம் மலர வேண்டும் என்று பேசுவாராம், தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசையோ, உலக நாடுகளையோ வலியுறுத்த மாட்டாராம். ஈழம் மலருவதற்கு இன்னமும் அவகாசம் தேவையாம். எப்போது, எஞ்சிய தமிழர்களையும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொன்று தீர்த்த பின்னரா? என்பதை கருணாநிதிதான் உலகிற்கு விளக்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தம்மை சந்தித்து அரசியல் பேசவில்லை என்றால், இரண்டு பேரும் சேர்ந்து என்ன பேசினார்கள்? சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை எப்படி மடை மாற்றம் செய்யலாம் என்பது குறித்தா? அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தா? என்பதை விளக்க வேண்டிய கடமை கருணாநிதிக்கு உண்டு.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமது பதவிக்காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்ததும் இல்லை. செயல்பட்டதும் இல்லை. இப்போது உலகத்தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும், மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள், பேச்சுகள், பேட்டிகள் கொடுத்து தம்மை மிகச்சிறந்த குழப்பவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் திமுகவின் துரோகத்தால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ,ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்”என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment