Translate

Friday 20 July 2012

”தமிழீழம்” இருக்கு ஆனா இல்லை – கருணாநிதி



‘தமிழீழம்’ என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தி.மு.க நடத்தவுள்ள டெசோ மாநாட்டில் ‘தமிழீழம்’ கோரும் தீர்மானம் முன்வைக்கப்பட மாட்டாது என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
1985ஆம் ஆண்டில் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ‘தமிழீழம்’ நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை புதுப்பித்தார் கருணாநிதி.

இந்த அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ‘தமிழீழம்’ என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீட்டித்திருக்கிறது இந்திய அரசு.
இதைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென கருணாநிதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனால் டெசோ மாநாட்டை தி.மு.க நடத்துமா? அல்லது தமிழீழ கோரிக்கையை மென்மையான குரலில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சந்தேகங்களுக்கு இன்று தி.மு.க தலைவர் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ‘அமைப்பின் பெயரே தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நடத்தும் மாநாட்டில் தமிழீழத்துக்கு ஆதரவாக தீர்மானம் போடமாட்டோம் என்பது கோபுரம் இல்லாத கோவிலைப் போன்றது’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment