என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
' என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இரவு 11 மணியளவில் ஆரம்பமாகிநடைபெற்றது. இந்த நிகழ்வு இடம்பெற்ற ஆலயச் சுற்றாடலில் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இங்கு ஆரம்பத்தில் பல பக்தி கானங்களைப் பாடிய சுகுமார் பின்னர் சினிமாப் பாடல்களையும் பாடினார். இதில் எம்.ஜி.ஆர் இன் திரைப்படமொன்றில் இடம்பெற்ற என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.இதன்போது திடீரென மேடைக்குள் பாய்ந்த சிறிலங்கா காவல்துறையினர் சுகுமாரிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தனர். அத்துடன் பால் திரட்டுக்கள் அடங்கிய கொப்பியையும் பறித்தெடுத்தனர். இந்தப் பாடல்புலிகளின் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இளைஞர்களை தூண்டுகிறது.தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகஉள்ளது. எனவே இந்தப் பாடலைப் பாட முடியாது என்று கூறி சுகுமாரிடன் முரண்பட்டனர்.இது இவ்வாறு நடந்துகொண்டிருந்த போது அங்கிருந்த பார்வையாளர்கள் பெரும் கடுப்பாகினர். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடுவதற்கு ஏன் சிறிலங்கா காவல்துறையினர் தடைவிதிக்கின்றனர் என்று கூறி கொதித்தெழுந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொண்டிருந்த வயதானவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் செயல் தொடர்பாக கடும்விரக்தியடைந்தனர்.
இதனிடையே சுகுமாரிடம் வாக்குவாதப்பட்ட காவல்துறையினர் மேடையை விட்டு இறங்கிச் சென்ற பின்னர்அங்கிருந்த மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சுகுமார், இந்தப் பாடல் மிக நீண்ட காலத்திற்கு முன்னர்வெளிவந்தது. அன்று தொடக்கம் இன்று வரை நான் பல மேடைகளில் இந்தப் பாடலைப் பாடி வருகின்றேன்.ஆனால், இன்று ஏன் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை என்றுதெரிவித்தார்.
மேலும், அரங்கை விட்டு இறங்கிய காவல்துறையினர் இந்த இசை நிகழ்வை ஒழுங்கு செய்த ஆலய அறங்காவலர்சபையிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களில் சிலரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதேவேளை மேற்படி பாடகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடகராக இருந்து பல எழுச்சிப்பாடல்களைப் பாடியிருந்தார். சாந்தன் உட்பட ஏனைய எழுச்சிப் பாடகர்களுடன் இணைந்து பல மேடைகளில் எழுச்சிப்பாடல்களைப் பாடி மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியவர் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்துவவுனியா நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்த சாந்தன், சுகுமார் உள்ளிட்ட பாடகர்கள் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் சேர்ந்தும் தனியாகவும் இன்னிசை நிகழ்வுகளைஅரங்கேற்றி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment